தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் காணொளிச் செய்தி திருத்தந்தையின் காணொளிச் செய்தி 

நாம் இறப்பு பற்றி மறக்கும்போது இறக்கத் துவங்குகிறோம்

மரணத்தின் அர்த்தம் என்னவென்று சிந்திக்கையில், உண்மையிலேயே அது வாழ்வு பற்றிய கேள்வியாகும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாம் இறப்பு பற்றி மறக்கும்போது இறக்கத் துவங்குகிறோம் என்று, அக்டோபர் 31, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய ஒரு காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ நகரில், Scholas Occurrentes, World ORT ஆகிய இரு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த இளையோர் உலக மாநாட்டிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், மரணம் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மரணத்தின் அர்த்தம் என்னவென்று சிந்திக்கையில், உண்மையிலேயே அது வாழ்வு பற்றிய கேள்வியாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, மரணமே, வாழ்வை, உயிர்த்துடிப்புள்ளதாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதி இலக்கு, ஒரு கதையை எழுதுவதற்கு அல்லது, ஓர் ஒவியத்தை வரைவதற்குத் தூண்டுகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு வார்த்தையின் இறுதி மற்றும், ஒவ்வொரு மௌனத்தின் இறுதி போன்று, ஒவ்வொரு நாள் வாழ்வின் சிறிய இலக்கில் கவனம் செலுத்துமாறு, மெக்சிகோ இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சூரியனுக்குக் கீழே எதுவுமே மறைவாக இருப்பதில்லை என்றுரைத்த திருத்தந்தை, நவீன மனித சமுதாயத்தின் இயல்பு பற்றிய சிந்தனைகளையும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நொடியின் இறப்பு, நான் என்ற தன்முனைப்பின் இறப்பு, புதியதொன்றிற்கு வழிவிடும் ஓர் உலகத்தின் இறப்பு ஆகிய மூன்று வகையான இறப்புகள், நம் வாழ்வை உண்மையிலேயே நிரப்புகின்றன என்று கூறியுள்ள திருத்தந்தை, மரணம் முடிவல்ல என்பதால், வாழ்வில் நாம் ஒருவர் ஒருவருக்காக இறப்பதற்கு கற்றுக்கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

அக்டோபர் 28ம் தேதி மெக்சிகோ நகரில் துவங்கிய இந்த இளையோர் மாநாடு, அக்டோபர் 31, இவ்வியாழனன்று, அதாவது இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட புனிதர் அனைவரின் பெருவிழா மற்றும், இச்சனிக்கிழமையன்று இடம்பெறும், இறந்தோர் அனைவரின் நினைவு நாளுக்கு முன்பு நிறைவுற்றுள்ளது.

Halloween என்பது, பல நாடுகளில் புனிதர் அனைவரின் பெருவிழாவுக்கு முந்திய நாளான அக்டோபர் 31ம் தேதி கடைப்பிடிக்கப்படும் நிகழ்வாகும். தலைக்குமேல் ஒளிவட்டத்துடன் (Hallow) சித்தரிக்கப்படும் புனிதர்கள், மறைசாட்சிகள் உட்பட இறந்த அனைவரையும் நினைப்பதற்காக, மேற்குலக கிறிஸ்தவ நாடுகளில் மூன்று நாள்களுக்கு இது கடைப்பிடிக்கப்படுகின்றது.

01 November 2019, 14:48