தேடுதல்

Vatican News
இராட்சிங்கர் விருது பெற்றோருடன் திருத்தந்தை இராட்சிங்கர் விருது பெற்றோருடன் திருத்தந்தை 

கலாச்சாரங்களோடு செயல்திறமுடைய உரையாடலில் ஈடுபட..

இராட்சிங்கர் விருது பெற்றுள்ள பேராசிரியர் Charles Margrave Taylor அவர்கள், கானடாவைச் சேர்ந்த கத்தோலிக்க மெய்யியலாளர். புர்கினோ ஃபாசோ நாட்டைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணி Paul Béré அவர்கள், புகழ்பெற்ற விவிலியப் பேராசிரியர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 09, இச்சனிக்கிழமை காலையில், இராட்சிங்கர் விருதுக் குழுவினரை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராசிரியர் Charles Taylor, அருள்பணி Paul Béré ஆகிய இருவருக்கும், இராட்சிங்கர் விருது வழங்கி வாழ்த்தினார்.

அக்குழுவினருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புமிக்க முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் சிந்தனைகள், எண்ணங்கள், ஆய்வுகள், உற்றுக்கேட்டல், உரையாடல் மற்றும், இறைவேண்டல் வழியாக, திருஅவைக்கு அவர் ஆற்றியுள்ள சிறப்பான பணிகள் மற்றும், போதனைகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இறையியலாளரும், மேய்ப்பருமான ஜோசப் இராட்சிங்கர் அவர்கள், வெறும் கருத்தியல் கலாச்சாரத்தில் மட்டும் தன்னை முடக்கிவிடாமல், விசுவாசம், ஆன்மீகம், அறிவு சார்ந்தவற்றில், உண்மையைத் தேடுவதில் நமக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் என்றும், திருத்தந்தை கூறினார்.

இறையியல், உலகின் பல்வேறு பகுதிகளில், காலத்திற்கேற்ப மாற்றங்களைக் கண்டாலும், கலாச்சாரங்களோடு பயன்மிக்க உரையாடலில் நிலைத்திருக்க வேண்டியது அதன் கடமை, அதேநேரம், அவ்வாறு இருப்பது, கிறிஸ்தவ விசுவாசத்திற்கும், திருஅவையின் தூதுரைப் பணிக்கும் தேவையானது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இராட்சிங்கர் விருதுகளைப் பெற்ற பேராசிரியர் Charles Taylor அவர்களையும், அருள்பணி Paul Béré அவர்களையும் பாராட்டிப் பேசிய திருத்தந்தை, இவ்விருவரும் இருவேறு கண்டங்கள் மற்றும், கலாச்சாரப் பின்புலங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், அவர்கள் வழங்கும் செய்தி ஒன்றுபோல் முதலில் தெரிகின்றது என்றும், அவ்விருவரும், கலாச்சாரங்களோடு, செயல்திறமுடைய உரையாடலில் ஈடுபட நம்மைத் தூண்டுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும், காலங்களுக்கு மத்தியில் ஒருவர் எப்போதும், கடவுளின் வழியையும், கிறிஸ்துவைச் சந்திப்பதையும் தேட வேண்டும், இவ்விருவரும், இதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேலும் அவர்களைப் பாராட்டிப் பேசினார்.

09 November 2019, 14:45