தேடுதல்

Vatican News
பன்னாட்டு இறையியல் கழகத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் பன்னாட்டு இறையியல் கழகத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

இறையியல், நற்செய்தியை ஒளிரச் செய்கின்றது

இறையியல் வல்லுனர்கள், திருஅவையின் முக்கிய பணியாகிய நற்செய்தி அறிவிப்பில் பங்கெடுக்கின்றனர். நற்செய்தியின் ஒளியைப் பரப்ப வேண்டிய மறைப்பணியைக் கொண்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இறையியல், கோட்பாடுகளை அமைப்பதில்லை, மாறாக, நற்செய்தியை ஒளிரச் செய்கின்றது என்று, நவம்பர் 29, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் தன்னை சந்திக்க வந்திருந்த, பன்னாட்டு இறையியல் கழகத்தின் 32 பிரதிநிதிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பன்னாட்டு இறையியல் கழகம் துவங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, அக்கழக உறுப்பினர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாக அக்கழகத்தினர் ஆற்றியுள்ள நற்பணிகளுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தார்.

இறையியலுக்கும், திருஅவையின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளுக்கும் இடையே புதிய உறவை உருவாக்கும் நோக்கத்தில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் கனியாக, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால், இக்கழகம் உருவாக்கப்பட்டது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கழகம் துவங்கப்பட்டது முதல், இன்று வரை, அதன் உறுப்பினர்களாக இருக்கின்ற இறையியல் வல்லுனர்கள் சிறந்த பங்கை ஆற்றி, 21 ஏடுகளையும், கடந்த ஐந்து ஆண்டுகளில், காலத்திற்கேற்ற இரு முக்கிய ஏடுகளையும் வெளியிட்டுள்ளனர் என்றும், திருத்தந்தை பாராட்டிப் பேசினார்.

திருஅவையின் வாழ்விலும், பணியிலும் கூட்டுப் பண்பு பற்றியும், இக்காலத்தில் சமய சுதந்திரம் பற்றியும், இக்கழகத்தினர் வெளியிட்டுள்ள ஏடுகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, அரசுக்கும் மதங்களுக்கும் இடையே இடம்பெறும் பலனுள்ள உரையாடலின் கனியாக மலரும் உண்மையான சமய சுதந்திரம், அனைவரின் நலனுக்கும், அமைதிக்கும் வழியமைக்கும் என்றும் கூறினார்.

இறையியல் வல்லுனர்கள், விசுவாசத்திற்கும், கலாச்சாரத்திற்கும் இடையே சிந்தனையாளர்களாகச் செயல்பட்டு, திருஅவையின் முக்கிய பணியாகிய நற்செய்தி அறிவிப்பில் பங்கெடுக்கின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இறையியலாளர்கள், நற்செய்தியின் ஒளியைப் பரப்ப வேண்டிய மறைப்பணியைக் கொண்டுள்ளனர் என்று கூறினார். 

மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், பன்னாட்டு இறையியல் கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

29 November 2019, 15:13