தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கும் இயேசு சபை அருள்பணி Renzo De Luca திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கும் இயேசு சபை அருள்பணி Renzo De Luca 

திருத்தந்தையின் மாணவர், மொழிபெயர்ப்பாளராக...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை ஜப்பான் நாடெங்கும் நேர்மறையான அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது - Renzo De Luca

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான்

நவம்பர் 23 முதல் 26 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜப்பான் நாட்டில் மேற்கொண்டுள்ள திருத்தூதுப் பயணத்தில், ஸ்பானிய மொழியில் அவர் ஆற்றும் அனைத்து உரைகளையும், ஜப்பான் இயேசு சபையின் மாநிலத் தலைவராகப் பணியாற்றும் அருள்பணி ரென்ஸோ தே லூக்கா (Renzo De Luca) அவர்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வழங்குகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், அருள்பணி லூக்கா அவர்களுக்கும் இடையே உருவான உறவு, பல ஆண்டுகள் கடந்து வந்த ஒரு பாதை. தற்போது திருத்தந்தையாகப் பணியாற்றும் பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனாவில், இயேசு சபை பயிற்சி இல்லத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றிய வேளையில், இளம் இயேசு சபை துறவி, லூக்கா அவர்கள் அவரிடம் பயின்றார். பின்னர், அவர், ஜப்பான் நாட்டிற்கு, மறைபரப்புப் பணியாளராக அனுப்பப்பட்டார்.

35 ஆண்டுகளுக்குப் பின், 2017ம் ஆண்டு, மார்ச் மாதம், அருள்பணி ரென்ஸோ தே லூக்கா அவர்கள், ஜப்பான் இயேசு சபையினருக்கு தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். திருத்தந்தை வழங்கும் அனைத்து உரைகளையும், ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வழங்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அருள்பணி லூக்கா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை கடந்த ஆறு ஆண்டுகளில் இரு முறை சந்தித்துள்ளதாக வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தையும் தானும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம், வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் முதல் முறையாகச் சந்தித்ததாகவும், அவ்வேளையில், எவ்வித தடையுமின்றி தங்கள் உறவைப் புதுப்பித்துக் கொண்டதாகவும், அருள்பணி லூக்கா அவர்கள் கூறினார்.

1981ம் ஆண்டு, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் ஜப்பான் நாட்டுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், கத்தோலிக்கத் திருஅவையின் மீது அந்நாட்டு மக்கள் கொண்டிருந்த எண்ணங்களை பெருமளவு மாற்றியது என்று தன் பேட்டியில் நினைவு கூர்ந்த அருள்பணி லூக்கா அவர்கள், தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை ஜப்பான் நாடெங்கும் நேர்மறையான அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.

23 November 2019, 14:38