தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், புத்த மதத்தினர் திருத்தந்தை பிரான்சிஸ், புத்த மதத்தினர் 

கத்தோலிக்க, புத்த மதத்திற்கிடையே ஆழமான நட்பு

கிறிஸ்தவ மற்றும், புத்த மதங்கள் இணைந்து செயலாற்றும்போது, மதம் என்ற பறவையானது, வானில் சிறகடித்துப் பறக்கும்

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து நாட்டில் நவம்பர் 20 முதல் 23 வரை மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் இறுதியில், அந்நாட்டில் வாழும் புத்த மதத் தலைவர், Phra Rajapariyattimuni அவர்கள் கத்தோலிக்க மதத்திற்கும், புத்த மதத்திற்கும் இன்னும் ஆழமான நட்பு உருவாகியுள்ளது என்று கூறினார். Wat Phra Chetuphon அரசகுல ஆலயத்தின் பொறுப்பாளரான Rajapariyattimuni அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில், பகிர்ந்துகொண்ட கருத்துக்கள இதோ:

“1972ம் ஆண்டு, ஜூன் மாதம், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், புத்த மதத் தலைவரான, ஏழாவது Somdet Phra Ariyavongsagatanana அவர்களை, வத்திக்கானில் வரவேற்று, சந்தித்ததிலிருந்து துவங்கிய நல்லுறவு, தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையால், இன்னும் ஆழமாகியுள்ளது. அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை மனித சமுதாயத்தில் உருவாக்குவது, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. உலகில் போர்களை நிறுத்தவும், வலுவற்றோரைக் காக்கவும் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழும்போது, கிறிஸ்தவ, புத்த மதங்கள், ஒரே விதமான பதில்களை வழங்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு பறவையின் இரு இறக்கைகளைப்போல இருக்கும் இவ்விரு மதங்களும் இணைந்து செயலாற்றும்போது, மதம் என்ற பறவையானது, வானில் சிறகடித்துப் பறக்கும்.

“திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பும், அமைதியும், எளிமையும் கொண்ட மனிதர். இவ்வுலகம், அவரை ஓர் எடுத்துக்காட்டாக கொள்ளவேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இருமுறை நான் சந்தித்துள்ளேன். அவர் அனைவர் மீதும் அன்புகொண்டுள்ள எளிய மனிதர், மிக சாதாரண வாழ்வை பின்பற்றும் அவர், மிக உயர்ந்த எண்ணங்கள் கொண்டுள்ளார். வசதியான எதையும் நாடாத அவர், தன்னிடம் உள்ளது போதும் என்ற மனநிலையுடன் வாழ்கிறார். திருத்தந்தை காட்டும் எளிமை, கருணை மற்றும் திருப்தி அடையும் உள்ளம் ஆகிய பண்புகளை, உலகில் உள்ள அனைவரும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஆயினும், பின்பற்றவேண்டும்.

“திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், தாய்லாந்து நாட்டிற்கு வருகை தந்தபோது, நான் ஓர் இளம் துறவியாக இருந்தேன். அவ்வேளையில், திருத்தந்தையின் வருகையைக் குறித்த முழு தெளிவும் புத்தத் துறவிகளான எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையின்போது, அவர் ஆற்றிய திருப்பலி உட்பட, அனைத்து நிகழ்வுகளிலும், பல புத்த துறவிகள் கலந்துகொண்டது, கிறிஸ்தவ, புத்த மதங்களுக்கிடையே உள்ள உறவு வளர்ந்துள்ளது என்பதற்கு ஒரு சான்று.” என்று புத்த மதத் தலைவர், Rajapariyattimuni அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2019, 14:32