தேடுதல்

Vatican News
தாய்லாந்து விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் விடைபெறுதல் தாய்லாந்து விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் விடைபெறுதல்  (AFP or licensors)

தாய்லாந்தில் திருத்தந்தைக்கு பிரியாவிடை

அன்புக்குரிய தாய்லாந்து நாட்டின்மீது, இறையாசீர் நிரம்பப் பொழியப்படுமாறும், மெய்ஞானம், நீதி மற்றும், அமைதியின் பாதைகளில், ஆண்டவர் இந்நாட்டை வழிநடத்துமாறும் செபிக்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 23, இச்சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்திலிருந்து புறப்பட்ட மற்றும், ஜப்பானைச் சென்றடைந்த நாள். இன்று உள்ளூர் நேரம் காலை ஏழு மணிக்கு, பாங்காக் திருப்பீடத் தூதரகத்தில் தனியே திருப்பலி நிறைவேற்றி, அந்த இல்லத்தில் தனக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த இல்லத்திற்கு, மொசைக் வேலைப்பாடுகளாலான, திருத்தூதுப் பயணம் பொறிக்கப்பட்ட பதக்கம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைப்பணி இலச்சினை ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்தார். பாங்காக் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 34.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, பாங்காக் இராணுவ விமான நிலையத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. “தாய்லாந்தில் எனது பயணம் சிறப்புற அமையச் செய்தவர்கள் மற்றும், தங்களின் செபத்தால் உடன் இருந்தவர்கள் ஆகிய எல்லாருக்கும் நன்றி. இந்த அன்புக்குரிய நாட்டின்மீது, இறையாசீர் நிரம்பப் பொழியப்படுமாறும்,  மெய்ஞானம், நீதி மற்றும், அமைதியின் பாதைகளில் இந்நாட்டை ஆண்டவர் வழிநடத்துமாறும் செபிக்கிறேன்” என்ற சொற்களை, #ApostolicJourney ஹாஸ்டாக்குடன் டுவிட்டர் செய்தியையும், வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பாங்காக் விமானத்தளத்தில், அரசரின் பிரதிநிதிகள், ஆறு அரசு அதிகாரிகள், ஆயர்கள், 11 சிறார் ஆகியோர் திருத்தந்தையை வாழ்த்தினர். இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. தாய்லாந்து உதவி பிரதமர், திருத்தந்தைக்கு மலர்மாலை அணிவித்தார். இந்த அன்பு பிரியாவிடைக்குப்பின், நெஞ்சார்ந்த நன்றியுடன், தாய்லாந்து மக்களிடமிருந்து விடைபெற்று, A330 தாய்லாந்து விமானத்தில், உள்ளூர் நேரம் இச்சனிக்கிழமை காலை பத்து மணியளவில் ஜப்பானுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாய்லாந்தில் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 21, இவ்வியாழன், நவம்பர் 22, இவ்வெள்ளி ஆகிய நாள்களில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், தாய்லாந்து அரசர் பத்தாம் இராமா, அந்நாட்டு பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், தாய்லாந்து அரண்மனை காவல்துறை தலைவருமான Prayut Chan-o-cha, அரசு, தூதரக அதிகாரிகள், புத்தமத முதுபெரும்தந்தை, கத்தோலிக்க ஆயர்கள், பல்சமயத் தலைவர்கள், கத்தோலிக்க விசுவாசிகள், இளையோர், நோயாளிகள் என, ஏறத்தாழ எல்லாத் தரப்பினரையும் சந்தித்தார். 95 விழுக்காட்டினர் புத்த மதத்தினரும், 0.46 விழுக்காட்டினர் கத்தோலிக்கரும் வாழ்கின்ற தாய்லாந்தில், கத்தோலிக்கர், தூய ஆவியாரின் வழிகாட்டுதலில், தூதுரைப்பணி சீடர்களாக, தங்களின் விசுவாசத்தை வாழுமாறு கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார். பாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில் ஏறத்தாழ ஏழாயிரம் இளையோர் உட்பட பத்தாயிரம் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றியபோது, இயேசுவோடு நட்புறவு கொள்வதன் வழியாக, விசுவாசத்தில் வேரூன்றி இருங்கள் என்று, இளையோரிடம் கேட்டுக்கொண்டார். மனித வர்த்தகம் என்ற வடு உட்பட, உலக அளவில் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதிலளிக்கும் முறையில் அனைத்து மதத்தினரும் ஒன்றுசேர்ந்து உழைக்குமாறு திருத்தந்தை வலியுறுத்தினார். 

23 November 2019, 14:21