தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நாகசாகி பேராயர் வரவேற்புரை வழங்குதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நாகசாகி பேராயர் வரவேற்புரை வழங்குதல்  (AFP or licensors)

ஆயர்கள் சந்திப்பில் நாகசாகி பேராயரின் வரவேற்புரை

திருத்தந்தையின் இப்பயணத்தால், கிறிஸ்தவம் பற்றி ஜப்பான் மக்களும், ஜப்பான் பற்றி உலகளாவியத் திருஅவையும் மேலும் அதிகமாக கற்றுக்கொள்வார்கள். ஜப்பானுக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் இடையேயுள்ள உறவு, மேலும் வளமுடையதாக மாறும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

புனித பிரான்சிஸ் சவேரியார், ஜப்பானுக்கு நற்செய்தி அறிவிக்க வந்ததன் 470ம் ஆண்டு நிறைவு, இந்த 2019ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படுகின்றது. புனித சவேரியாரும், அவரோடு வந்தவர்களும் இந்நாட்டிற்கு வந்தபின்னர், கிறிஸ்தவம் வளரத் தொடங்கியது. ஆயினும், 1614ம் ஆண்டில், கிறிஸ்தவர்களுக்கெதிரான சித்ரவதைகள் தொடங்கி, அவை 260 ஆண்டுகள் நீடித்தன. அவற்றில் பல மறைசாட்சிகள் பிறந்தனர். இந்த ஆண்டுகளில், குறிப்பாக, நாகசாகி பகுதியில், விசுவாசிகள், தங்களின் வழியில் விசுவாசத்தைக் காத்தனர். அதை, திருமுழுக்கு, செபம் மற்றும், போதனைகள் அடுத்த தலைமுறைகளுக்கு வழங்கினர். இந்த முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க செயலை அங்கீகரிக்கும் விதமாக, கடந்த ஆண்டில், நாகசாகி பகுதியிலுள்ள ஆலயங்களும், கிராமங்களும், உலக பாரம்பரிய நினைவிடங்களாக அங்கீகரிக்கப்பட்டன. ஜப்பானியர்கள், இயற்கையை அன்புகூர்பவர்கள் மற்றும், மதிப்பவர்கள். ஜப்பானிய சமுதாயமும் அமைதியான சமுதாயம். எனினும், மனித வாழ்வு தொடர்பான பல்வேறு பிரச்சனைகள், முழு மனிதனின் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. திருத்தந்தையே, வாழ்வின் மாண்பு, அதன் பொருள் மற்றும், அதை எவ்வாறு வாழ்வது என்பது பற்றி தாங்கள் எங்களுக்குச் செய்தி வழங்குவீர்கள் என நம்புகிறோம். ஜப்பான், தனது அண்டை நாடுகளுடன் அமைதியைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது. போரில் அணுகுண்டுகள் வீசப்பட்ட ஒரே நாடான ஜப்பான், இத்தகைய பேரிழிவுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என, அழுகுரல் எழுப்புகின்றது. மனித சமுதாயத்திற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று தாங்களும் உலகுக்கு விண்ணப்பப்பீர்கள் என நம்புகிறோம். ஜப்பானுக்கு முதல் திருப்பீட பிரதிநிதி அனுப்பப்பட்டதன் நூறாம் ஆண்டு, இவ்வாண்டில் நினைவுகூரப்படுகின்றது. கிறிஸ்தவம் பற்றி ஜப்பான் மக்களும், ஜப்பான் பற்றி உலகளாவியத் திருஅவையும் மேலும் அதிகமாக கற்றுக்கொள்ளும், ஜப்பானுக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் இடையேயுள்ள உறவு, மேலும் வளமுடையதாக மாறும், உலக சமுதாயத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் உதவிசெய்யும் என விரும்புகிறோம். இன்று ஜப்பானில் துவங்கியுள்ள இப்பயணம், முக்கியத்துவம் வாய்ந்த மற்றும், பலனுள்ளதாக அமைய, அன்னை மரியா மற்றும், புனித பிரான்சிஸ் சவேரியார், ஆண்டவரிடம் பரிந்துரைப்பார்களாக.

23 November 2019, 14:34