தேடுதல்

Vatican News
உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி திறப்பு நிகழ்வு உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி திறப்பு நிகழ்வு  (ANSA)

அனைவரும் அமைதியைக் கட்டியெழுப்ப திருத்தந்தை அழைப்பு

ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும், அமைதி எனும் கொடைக்காக கடவுளிடம் மன்றாடி, அமைதியைக் கட்டியெழுப்பவும், அதைப் பாதுகாக்கவும் அழைப்புப் பெறுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“உரையாடலுக்கு கவர்ச்சிகரமான கையெழுத்து: கலாச்சாரம் மற்றும், கலை வழியாக அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில், உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் புதிய கண்காட்சி ஒன்றை, அக்டோபர் 31, இவ்வியாழன் மாலையில் திறந்து வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்காக நாம் அழைப்பு விடுப்பதோடு நிறுத்திக்கொண்டால் மட்டும் போதாது, மாறாக, மரணத்திற்குத் தீர்ப்பிடப்பட்டுள்ள வலுவற்ற பலர், மற்றும், பிறந்த நாடுகள், சொந்தங்கள், வீடுகள் ஆகிய அனைத்திலிருந்தும் கட்டாயமாக வெளியேற்றப்படும் மக்கள் ஆகியோர், தங்கள் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும், அமைதி எனும் கொடையை அருளுமாறு கடவுளிடம் மன்றாடி, அமைதியைக் கட்டியெழுப்பவும், அதைப் பாதுகாக்கவும் அழைப்புப் பெறுகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, தங்கள் மதத்தையும், மத நம்பிக்கையையும் போதிப்பவர்கள், அவற்றிற்குச் சான்றுகளாகவும் மாற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அமைதி பற்றி கற்றுக்கொடுப்பதற்கு, மத நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, நன்மனம் கொண்ட எல்லாருக்கும் கடமை உள்ளது என்றும், உரையாடல் என்பது, போர்களைத் தடுத்து, தீர்வுகளைக் காண்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து மனிதரின் இதயங்களில் கடவுள் எழுதியுள்ள விழுமியங்களையும், புண்ணியங்களையும் வெளிக்கொணர்வதாயும் இருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் முன்னாள் தலைவர், மறைந்த கர்தினால் ஜான் லூயி துரான் அவர்கள், திருப்பீடத்தின் பிரதிநிதியாக கடைசியாக, சவுதி அரேபியா சென்றதைக் கொண்டாடுவதாகவும் உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, கர்தினால் துரான் அவர்கள், உரையாடல் மனிதர் என்று புகழ்ந்து பேசினார்.

அந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள, சவுதி அரேபியாவைச் சேர்ந்த Othman Alkhuzaiem என்ற கலைஞரின், 24 கவர்ச்சியூட்டும் அழகான கையெழுத்து கலைவடிவங்கள், உரையாடல் மற்றும் அமைதி குறித்து தியானிப்பதற்கு அழைப்பு விடுக்கின்றன. இக்கண்காட்சி, நவம்பர் 4, இத்திங்கள் முதல், நவம்பர் 22, வெள்ளி வரை பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கல்வி ஒப்பந்தத்தின் மீள்உருவாக்கம் என்ற தலைப்பில், 2020ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ள பன்னாட்டு நிகழ்வை முன்னிட்டு, இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட, ஆய்வு நாளின் ஓர் அங்கமாகவும் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

01 November 2019, 14:54