தேடுதல்

Vatican News
தாய்லாந்து Wat Phra Chetuphon புத்த மத ஆலயம் தாய்லாந்து Wat Phra Chetuphon புத்த மத ஆலயம்  (©Chillshewa - stock.adobe.com)

பாங்காக் Amphorn அரச மாளிகை

தாய்லாந்து அரசர் 5ம் ராமாவின் ஆணையின்பேரில், அரச மாளிகையின் கட்டடப் பணிகள், 1890ம் ஆண்டில் துவங்கி, 1906ம் ஆண்டில் முடிக்கப்பட்டன. இது முதலில், 'தந்தம் தோட்டம்' என்று பெயரிடப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

நவம்பர் 21, இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில், பாங்காக் நகரிலுள்ள Amphorn அரச மாளிகை சென்று, கடந்த மே 4ம் தேதி, அரசராக முடிசூட்டப்பட்ட 66 வயது நிரம்பிய அரசர் Maha Vajiralongkorn (Rama X) அவர்களையும், அரசி Suthida அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன. தாய்லாந்து அரச குடும்பத்தினர் சந்திப்பிற்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மாளிகையில், 1984ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அரசர் Maha Vajiralongkorn அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். அச்சமயத்தில் இவர், வாரிசுரிமை இளவரசராக இருந்தார்.  தாய்லாந்தை நீண்ட காலமாக ஆட்சி செய்த, அரசர் Maha Vajiralongkorn  அவர்களின் தந்தை Bhumibol Adulyadej அவர்கள், 2016ம் ஆண்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவர் அரசராக முடிசூட்டப்பட்டிருக்கலாம். ஆயினும், அரச பதவியை ஏற்பதற்குமுன், தன் தந்தைக்காக துக்கம் அனுசரிப்பதற்காக, இவர் உடனடியாக முடிசூட்டப்பட அனுமதிக்கவில்லை. 2019ம் ஆண்டில் மூன்று நாள்கள் நடைபெற்ற, இந்த அரசரின் முடிசூட்டு விழா நிகழ்வில், 7.3 கிலோ கிராம் எடையுள்ள ‘வெற்றியின் மாபெரும் கீரிடம்’ இவரது தலையில் வைக்கப்பட்டது.

தாய்லாந்து அரசர் Chulalongkon (5ம் ராமா) அவர்கள், தான் குடியிருப்பதற்கு, Dusit தோட்டங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய அரண்மனை வேண்டும் என விரும்பினார். எனவே, இந்த அரசரின் ஆணையின்பேரில், பிரமாண்டமான தாய்லாந்து அரச மாளிகையின் கட்டடப் பணிகள், 1890ம் ஆண்டில் துவங்கி, 1906ம் ஆண்டில் முடிக்கப்பட்டன. 'தந்தம் தோட்டம்' என முதலில் பெயரிடப்பட்ட இம்மாளிகை, நாளடைவில், ‘Amphorn Sathan Residential Hall’ எனப் பெயர் மாற்றம் அடைந்தது. இதற்கு தாய் மொழியில், “விண்ணில் அரச இருப்பிடம்” என்று பொருள். 1900களின் துவக்கம் வரை, தாய்லாந்து ஒரு நாடாக விளங்கவில்லை. தாய்லாந்து புத்த மதத்திற்கு, அரசரே அதிகாரப்பூர்வ புறங்காவலர் ஆவார்.

21 November 2019, 15:47