தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

இறைவன், பாவங்களை வெறுக்கிறார், பாவிகளை அல்ல

பாவியாக இருந்தும், தான் அன்பு கூரப்படுவதை உணர்ந்து, அந்த அன்பை எதிர்கொள்ளும் சக்கேயு, பிறரை அன்புகூர்பவராக மாறுகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தவறு செய்பவர்களை நாம் சந்திக்கும்போது, நம் அணுகுமுறை, இரக்கம் நிறைந்ததாக இருக்கவேண்டும் என, இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தை மையப்படுத்தி, மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இழந்ததைத் தேடி, அதனை மீட்க வந்திருக்கும் இயேசுவை, அனைவரும் வரவேற்க உதவும் வகையில், நம் அணுகுமுறைகள் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வரி தண்டுவோருக்கு தலைவரான சக்கேயுவை இயேசு சந்தித்தபோது, அவருக்கு பெரிய ஓர் அறிவுரையை இயேசு வழங்கவில்லை, மாறாக, தானே முன்வந்து அவரின் வீட்டுக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கிறார், என்பதை குறிப்பிட்டுக் காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவியிடம் தங்கப்போகிறாரே என்று அங்கிருந்த மக்கள் முணுமுணுத்ததையும் பொருட்படுத்தாது, தன் கனிவான பார்வையை சக்கேயு மீது வீசுகிறார் இயேசு என மேலும் உரைத்தார்.

எரிகோவைச் சேர்ந்த பாவியின் மனந்திரும்பல் இயேசுவின் கனிவான பார்வையிலிருந்து துவங்குகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாவிகளை வெறுத்து ஒதுக்குவது, அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் மனம் கடினமாகவே உதவும், என்று தன் மூவேளை செப உரையில் கூறியத் திருத்தந்தை, இறைவன் பாவங்களை வெறுக்கிறார் பாவிகளை அல்ல என்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும் என்பதை இயேசுவின் செயலிலிருந்து நாம் கண்டுகொள்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பாவங்களை வெறுக்கும் இறைவன், பாவிகளை தேடி மீட்டு அவர்களை நல்வழிக்குக் கொணர்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளார் என்பதை, சக்கேயுவுக்கும் இயேசுவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பில் நாம் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களுக்குத் துன்பங்களைக் கொடுத்து, வரி வசூலித்து வந்த ஒருவர், இயேசுவின் கனிவான பார்வையால், மனம் திருந்தி செயல்படுவதைக் காண்கிறோம் என்றார்.

பாவியாக இருந்தும், தான் அன்பு கூரப்படுவதை உணர்ந்து அந்த அன்பை எதிர்கொள்ளும் சக்கேயு, பிறரை அன்புகூர்பவராக மாறுகிறார் என, தன் ஞாயிறு மூவேளை செப உரையில் மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

03 November 2019, 13:00