தேடுதல்

Vatican News
ஹிரோஷிமா அமைதி நினைவிடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் ஹிரோஷிமா அமைதி நினைவிடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

ஹிரோஷிமா நினைவிடம் - செபத்தின் வடிவில், திருத்தந்தையின் உரை

நீதியும், பாதுகாப்பும் நிறைந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப, நம்மிடையே உள்ள ஆயுதங்களை நாம் களையவேண்டும். "தாக்கக்கூடிய ஆயுதங்கள் ஏந்திய கரங்களுடன் யாரும் அன்பு கூற இயலாது" (புனித 6ம் பவுல், ஐ.நா.அவை உரை)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"உன்னுள் சமாதானம் நிலவுவதாக!" என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். (திருப்பாடல் 122:8)

கருணையின் இறைவா, வரலாற்றின் ஆண்டவரே, சாவும், வாழ்வும், அழிவும், மறுபிறப்பும், வேதனையும், பரிவும் சந்திக்கும் இவ்விடத்திலிருந்து உம்மை நோக்கி கண்களை உயர்த்துகிறோம்.

தெறித்து விழும் மின்னல், மற்றும் நெருப்பால், இவ்விடத்தில், எத்தனையோ மனிதர்கள், அவர்களுடைய கனவுகள், நம்பிக்கைகள் எல்லாம் மறைந்து, இருளும், அமைதியும் உருவானது. ஒரு நொடியில், அழிவு மற்றும் சாவின் கருந்துளையில் அனைத்தும் விழுங்கப்பட்டது. வாழ்விழந்த பலரின் குரல்களை, இந்த மௌன பாதாளத்திலிருந்து, இன்றும் கேட்கிறோம்.

பலியானவர்கள் அனைவருக்கும் வணக்கம்

பலியானவர்கள் அனைவருக்கும் இங்கே என் வணக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன். அமைதியின் திருப்பயணியாக இவ்விடத்திற்கு வரவேண்டும் என்ற என் கடமையை உணர்ந்தேன். வன்முறைகளால் பாதிக்கப்பட்டோரையும், அமைதிக்காக எங்கும் இன்றைய மனிதர்கள், சிறப்பாக இளையோர் அனைவரையும் இங்கு நினைவுகூர்ந்து, மெளனமாக வேண்டி நிற்கிறேன். வருங்கால நம்பிக்கையை கொண்டுள்ள இந்த நினைவிடத்தில், வன்முறைகளாலும், மோதல்களாலும் துன்புறும் அனைத்து வறியோரின் அழுகுரலை இங்கு கொணர்ந்துள்ளேன்.

இன்றைய காலத்தில் நிலவும் ஏற்றுக்கொள்ள இயலாத ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள், நமது பொதுவான இல்லத்தைக் காக்க இயலாத நிலை, ஆகியவை குறித்து குரல் எழுப்ப இயலாதவர்களின் குரலாக இருப்பது, என் பணிவான விருப்பம்.

அணு ஆயுத பயன்பாடு பெரும் குற்றம்

மீண்டும் ஒருமுறை மிக ஆணித்தரமாக நான் பறைசாற்ற விழைவது இதுதான்: அணு சக்தியை போர்களில் பயன்படுத்துவது, மனித மாண்புக்கு மட்டுமல்ல, நமது பொதுவான இல்லத்தின் எதிர்காலத்திற்கும் எதிரான குற்றம் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறேன். அணுசக்தியை, போர்ச்சூழலில் பயன்படுத்துவது, அனைத்து நன்னெறிகளுக்கும் புறம்பானது. இந்தக் குற்றத்திற்காக, நாம் தீர்ப்பிடப்படுவோம். அமைதியைப் பற்றி பேசிவிட்டு, அதற்காக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நம்மை, எதிர்கால தலைமுறையினர் கண்டனம் செய்வர்.

நீதியும், பாதுகாப்பும் நிறைந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப, நம்மிடையே உள்ள ஆயுதங்களை நாம் களையவேண்டும். "தாக்கக்கூடிய ஆயுதங்கள் ஏந்திய கரங்களுடன் யாரும் அன்பு கூற இயலாது" (புனித 6ம் பவுல், ஐ.நா.அவை உரை, 4 அக்டோபர் 1965). மோதல்களைத் தீர்க்க, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதே சரியான வழி என்று கூறும்போது, எவ்வாறு, அமைதியைப்பற்றி பேசமுடியும்? ஆயுதமற்ற அமைதியே, உண்மையான அமைதி, ஏனெனில், "அமைதி என்பது போர்கள் இல்லாத நிலை அல்ல, மாறாக, அது, தொடர்ந்து கட்டியெழுப்பப்படவேண்டிய முயற்சி" (Gaudium et Spes, 78)

மூன்று நன்னெறி கடமைகள்

நினைவில் கொள்ளுதல், இணைந்து பயணித்தல், பாதுகாத்தல் என்ற இம்மூன்று நன்னெறி கடமைகளும், இங்கு, ஹிரோஷிமாவில், இன்னும் அழுத்தமான பொருள் பெறுகின்றன. இன்றைய, மற்றும் நாளைய தலைமுறையினர், இங்கு நடந்ததை மறந்துவிடக்கூடாது. இதுபோல ஒருபோதும் நடக்கக்கூடாது என்பதை அனைத்து தலைமுறையினரும் உணர்வதற்கு, இந்த வரலாற்று நினைவை தொடர்வது, மிகவும் முக்கியம்.

நாம் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தில், புரிந்துகொள்ளுதலும், மன்னிப்பும் அவசியம். இன்று நம் பார்வையை மறைக்கும் அளவு கருமேகங்கள் திரண்டாலும், அவற்றைத் தாண்டி, எதிர்காலம் என்ற தொடுவானம் உள்ளது என்ற நம்பிக்கையுடன் நாம் இணைந்து பயணிப்போம். நாம் இவ்வுலகில் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தில், ஒருவர் ஒருவரை பாதுகாக்க அழைக்கப்பட்டுள்ளோம். நமது பொதுவான இலக்கை அடைவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். நமது பொதுவான இல்லமான இந்தப் பூமிக்கோளம், உலகமயமாக்கலால் மட்டும் இணைக்கப்படவில்லை, அதற்கு மாறாக, துவக்கத்திலிருந்தே, இந்த இல்லத்தின் அனைத்தையும் பொதுவாகப் பகிர்வதன் வழியே நாம் இணைக்கப்பட்டுள்ளோம்.

போர் இனி ஒருபோதும் வேண்டாம்

அணுகுண்டின் பயன்பாட்டினாலும், அதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக, அனைத்து மோதல்களாலும் பாதிக்கப்பட்டோரின் சார்பாக, இறைவனை நோக்கியும், உலகில் வாழும் நல்மனம் கொண்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களை நோக்கியும் நாம் குரல் எழுப்பி, வேண்டுவது இதுதான்: போர் இனி ஒருபோதும் வேண்டாம், ஆயுதங்களின் மோதல் இனி ஒருபோதும் வேண்டாம், இத்தனை வேதனைகள் இனி ஒருபோதும் வேண்டாம்! நாம் வாழும் காலத்தில், நமது உலகிற்கு அமைதி வரட்டும்.

ஓ இறைவா, "மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்" (திருப்பாடல் 84:11-12) என்று எங்களுக்கு வாக்களித்துள்ளீர்.

வாரும் ஆண்டவரே, எங்கு அழிவு பெருமளவு விளைந்துள்ளதோ, அங்கு, எதிர்காலத்தை வேறுபட்ட வழியில் உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கையும், பெருமளவு விளைவதாக. அமைதியின் இளவரசே, ஆண்டவரே, வாரும். எங்களை உமது அமைதியின் கருவிகளாகவும், பிம்பங்களாகவும் உருவாக்கும்!

24 November 2019, 12:38