தேடுதல்

POPE-JAPAN/ POPE-JAPAN/ 

ஜப்பான் நாட்டு அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில், அணுகுண்டினால் விளைந்த அழிவு, இனி ஒருபோதும் மனித வரலாற்றில் நிகழக்கூடாது என்று இறைவனை வேண்டுவதற்கும், நல்மனம் கொண்ட அனைவரிடமும் விண்ணப்பிக்கவும் நான் இங்கு வந்துள்ளேன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரதமரே, அரசு அதிகாரிகளே, ஏனைய அரசுத் தூதர்களே, பெரியோரே, பெண்மணிகளே, நீங்கள் ஒவ்வொருவரும், மாண்பு மிகுந்த இந்நாட்டிற்கும், உங்கள் நாடுகளுக்கும் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி. இறைவனின் ஆசீர், இந்நாட்டு அரசர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், ஜப்பான் நாட்டு மக்கள் அனைவர் மீதும் இறங்கிவர வேண்டுகிறேன்.

திருப்பீடம் - ஜப்பான் உறவு

திருப்பீடத்திற்கும், ஜப்பான் நாட்டிற்கும் இடையே நிலவும் உறவு, துவக்கத்திலிருந்து ஒருவரை ஒருவர் பாராட்டும் வகையில் அமைந்து வந்துள்ளது. துவக்கத்தில் இங்கு பணியாற்றிய இயேசு சபை மறைப்பணியாளர் Alessandro Valignano, அவர்கள், 1579ம் ஆண்டில், இந்நாட்டைக் குறித்து, இவ்வாறு எழுதியிருந்தார்: "மனிதர்கள் மீது இறைவன் என்ன வளங்களைப் பொழிந்துள்ளார் என்பதைக் காணவேண்டுமெனில், ஒருவர், ஜப்பான் நாட்டுக்கு வந்து அவற்றைக் காணவேண்டும்".

ஜப்பானியக் கத்தோலிக்கர்களை அவர்களது நம்பிக்கையிலும், தேவையில் இருப்போருக்கு அவர்கள் ஆற்றிவரும் பணிகளிலும் உறுதிப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன். இப்பயணத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள "அனைத்து உயிர்களையும் பாதுகாக்க" என்ற விருதுவாக்கு, அனைத்து மக்களும், குறிப்பாக தேவையில் இருப்போர் அனைவரும் அசைக்கமுடியாத மாண்புடையவர்கள் என்பதைக் கூறுகிறது. நிலநடுக்கம், சுனாமி, மற்றும் அணு உலை கதிர்வீச்சு என்ற மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததும், அவர்கள் பகிர்வுகளைக் கேட்டதும், எனக்கு, சக்தி வாய்ந்ததோர் அனுபவமாக இருந்தது.

அணுகுண்டின் அழிவு இனி வேண்டாம்

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில், அணுகுண்டினால் விளைந்த அழிவு, இனி ஒருபோதும் மனித வரலாற்றில் நிகழக்கூடாது என்று இறைவனை வேண்டுவதற்கும், நல்மனம் கொண்ட அனைவரிடமும் விண்ணப்பிக்கவும், நான் இங்கு வந்துள்ளேன். மனிதர்கள் நடுவே எழும் மோதல்களும், தவறானப் புரிதல்களும், உரையாடல் வழியே மட்டும் தீர்க்கப்படவேண்டும் என்பதை, வரலாறு நமக்குச் சொல்லித் தருகிறது. அணு சக்தியைக் குறித்த கேள்விக்கு பன்னாட்டளவில் முடிவும், அதற்கேற்ற செயலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன்.

ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்

ஞானம், உள்ளார்ந்த அறிவு, மற்றும் பரந்துபட்ட கண்ணோட்டம் இவற்றைக் கொண்ட உரையாடல் மற்றும் சந்திப்பு கலாச்சாரம், நீதியான, உடன்பிறந்த உணர்வு கொண்ட உலகை உருவாக்க அவசியம். இத்தகைய கலாச்சாரத்தை உருவாக்க, ஒலிம்பிக் விளையாட்டுக்கள், சிறந்ததொரு தருணம். ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், நாடுகள் என்ற குறுகிய எல்லைகளைத் தாண்டி, நல்லுறவை வளர்க்கும் என்று நம்புகிறேன்.

ஜப்பானில் விளங்கும் பழமையும் செறிவும் மிக்க கலாச்சாரத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பு பெற்றேன். மதம் மற்றும் நன்னெறியின் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ள இக்கலாச்சாரம், பல்வேறு முன்னேற்ற முயற்சிகள் நடுவே இன்னும் செழிப்புடன் வளர்ந்துவருவது கண்டு மகிழ்கிறேன். மதங்களிடையே நல்லுறவை வளர்ப்பது, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க அவசியம் என்பதோடு, அது, வருங்காலத் தலைமுறையினரை, நன்னெறியில் வளர்க்கவும் உதவுகிறது.

செரி பழத்தின் மென்மையான குணம்

இந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள இயற்கை வளங்களால் ஈர்க்கப்படுவர் என்பது உறுதி. இந்நாட்டின் இயற்கையைச் சித்திரிக்க, செரி பழங்கள் ஓர் அடையாளமாக உள்ளது. செரி பழத்தின் மென்மையான குணம், நாம் வாழும் பொதுவான இல்லம் எளிதில் உடைந்துபோகும் அளவு மென்மையானது என்பதை உணர்த்துகிறது. இந்த பூமிக்கோளம் இயற்கைப் பேரிடர்களால் மட்டுமல்ல, மனிதரின் பேராசையால் உருவாகும் சீரழிவுகளாலும் அழிந்து வருகிறது. இந்த ஆபத்து குறித்து, பன்னாட்டு அரசுகளும், அமைப்புக்களும் பேச தயங்கும் வேளையில், இளைய தலைமுறை, இதைக் குறித்து குரல் எழுப்பி, நாம் சரியான முடிவுகள் எடுக்கும்படி நம்மை வற்புறுத்துகின்றது.

நமது பூமிக்கோளத்தின் பாதுகாப்பு என்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, அது, மனித சமுதாய பாதுகாப்பையும் உள்ளடக்கியது. இயற்கைச் சீரழிவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, வறியோர், செல்வந்தர் இடைவெளியைக் குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும். இந்த விடயத்தில், ஜப்பான் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறித்து நான் அறிவேன்.

நாட்டு வளர்ச்சியின் அளவுகோல்

சமுதாய, பொருளாதார, மற்றும் அரசியல் செயல்பாடுகள் அனைத்தின் மையமாக, மனித மாண்பு இருக்கவேண்டும். தலைமுறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு உருவாகவேண்டும். பல்வேறு சவால்களுடன் வளர்ந்துவரும் இளைய தலைமுறையினரையும், தனிமை என்ற நோயினால் துன்புறும் முதியோரையும் இவ்வேளையில் நான் எண்ணிப்பாக்கிறேன். ஒவ்வொரு நாடும், தன் வளர்ச்சியை, பொருளாதார சக்தியைக் கொண்டு அளப்பதற்குப் பதில், சமுதாயத்தில் தேவையில் இருப்போரை காப்பதில் காட்டப்படும் அக்கறையைக் கொண்டு அளக்கவேண்டும்.

நான் மேற்கொண்ட ஜப்பான் நாட்டுப் பயணம் முடிவுக்கு வரும் இவ்வேளையில், நீங்கள் வழங்கிய வரவேற்பிற்கும், விருந்தோம்பலுக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைத்து உயிர்களையும் பாதுக்காக்கும் வகையில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் ஊக்குவிக்க விழைகிறேன். உங்கள் மீதும், உங்கள் குடும்பங்கள் மீதும் தெய்வீக ஆசீர் இறங்கிவர வேண்டுகிறேன். மிக்க நன்றி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2019, 15:23