தேடுதல்

Vatican News
அப்போஸ்தலிக்க ஆவண காப்பகம் அப்போஸ்தலிக்க ஆவண காப்பகம்  

வத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்திற்கு பெயர் மாற்றம்

வத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்தில் 17ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, திருஅவை மற்றும், உலகின் வரலாற்று மற்றும், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

‘இரகசியம்’ என்ற சொல்லாடலுக்கு வழங்கப்படும் நவீனகால விளக்கங்களால், எதிர்மறை விளைவு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்தின் பெயரை, அப்போஸ்தலிக்க ஆவண காப்பகம் என்று பெயர் மாற்றியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 28, இத்திங்களன்று, “L’esperienza storica” என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் Motu proprio என்ற அறிக்கை வழியாக, இந்த பெயர் மாற்றத்தை அறிவித்துள்ளார்.

வத்திக்கான் இரகசிய ஆவண காப்பகம், தனது தனித்துவம், அமைப்புமுறை, மற்றும், தன் பணியில் எவ்வித மாற்றமுமின்றி, அது, இப்போதிலிருந்து அப்போஸ்தலிக்க காப்பகம் என்று அழைக்கப்படும் என்று, திருத்தந்தை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘இரகசியம்’ என்ற சொல், ‘தனிப்பட்ட’ என்பதற்குப் பதில், மறைத்து வைக்கப்படும், வெளியிடப்படாத மற்றும், ஒரு சிலருக்கு மட்டுமே என்ற, முற்சார்பு எண்ணத்தை அகற்றும் நோக்கத்தில், இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் திருத்தந்தை விளக்கமளித்துள்ளார்.

வத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்தில் 17ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, திருஅவை மற்றும், உலகின் வரலாற்று மற்றும், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த சேமிப்புக்கள், 17ம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து, இரகசிய ஆவண காப்பகம் என அழைக்கப்பட்டு வந்தன என்றும், இவை, திருத்தந்தைக்கு மட்டுமேயுரிய தனிப்பட்ட ஆவண காப்பகம் என்பதைக் குறிப்பதற்காகவே இவ்வாறு பெயரிடப்பட்டன என்றும், திருத்தந்தை அதில் எழுதியுள்ளார்.

பாப்பிறையின் திருப்பணிக்கு இன்றியமையாத கருவியாக, திருப்பீடத்தின் ஆவண காப்பகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக, இவை உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டவே, இவை அப்போஸ்தலிக்க ஆவண காப்பகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளக்கியுள்ளார்.

அறிவியல் ஆய்வுக்குச் சமமான அல்லது, ஐந்து வருட பல்கலைக்கழக பட்டயச் சான்றிதழ் பெற்றுள்ள வல்லுனர்களுக்கு, 1939ம் ஆண்டு பாப்பிறைப்பணியை நிறைவுசெய்த திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் காலம் வரையுள்ள ஆவணங்களை, ஆய்வுக்கென பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

மேலும், இந்த வாய்ப்பு, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதியிலிருந்து, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் காலம்வரை, அதாவது 1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையுள்ள ஆவணங்கள் வரை நீடிக்கப்படும் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

29 October 2019, 15:09