தேடுதல்

Vatican News
திருத்தூதுப்பணி துறவு சபைகள் சந்திப்பு திருத்தூதுப்பணி துறவு சபைகள் சந்திப்பு 

நற்செய்தியின் மகிழ்வின்றி திருத்தூதுப்பணியாளராக இருக்க இயலாது

திருத்தூதுப்பணியாளருக்கு நற்செய்தியின் மகிழ்வு அவசியம். இந்த மகிழ்வின்றி, எவரும், திருத்தூதுப்பணியாற்ற இயலாது. கவரக்கூடிய வகையில் நற்செய்தி அறிவிக்க முடியாது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

நம்மையெல்லாம் கவர்ந்திழுக்கும் இயேசுவின் நற்செய்தியை, மகிழ்வோடு அறிவியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் துவங்கப்பட்ட திருத்தூதுப்பணி துறவு சபைகளிடம் கூறினார்.

கடவுளின் ஆசீர்வாதமாகிய இயேசு கிறிஸ்துவை, அனைத்து நாடுகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை இறைமக்களில் உயிரூட்டம் பெறச் செய்யுங்கள் என்று, செப்டம்பர் 30, இத்திங்களன்று தான் சந்தித்த துறவு சபைகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொம்போனி, கொன்சலாத்தா, PIME மற்றும், சவேரியன் துறவு சபைகளின் ஏறக்குறைய  எழுபது, இருபால் தலைவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் விழிப்புணர்வை அதிகரிப்பதில், இவர்களது சபைகள், தலத்திருஅவைகளோடு, இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார்.

திருஅவை தெருக்களில் வாழ்கின்றது என்ற திருத்தந்தை, மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற தங்கள் அழைப்பிற்கு, இச்சபைகள் விசுவாசமாய் இருக்குமாறும் வலியுறுத்தினார்.

திருத்தூதுப்பணியாற்ற வேண்டுமென்ற திருஅவையின் கடமைக்கு புதிய உந்துதல் அளிக்கும் நோக்கத்தில் இச்செவ்வாயன்று துவங்கியுள்ள, சிறப்பு திருத்தூது மாதத்தை முன்னிட்டு, இத்துறவு சபைகளின் தலைவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

01 October 2019, 15:42