தேடுதல்

Vatican News
புனித குழந்தை தெரேசா புனித குழந்தை தெரேசா 

சிறப்பு திருத்தூது மாதம் புனித குழந்தைதெரேசாவுக்கு அர்ப்பணிப்பு

2017ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ஞாயிறு மூவேளை செப உரையில், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், சிறப்பு திருத்தூது மாதமாகச் சிறப்பிக்கப்படும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 1, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள சிறப்பு திருத்தூது மாதத்தை, புனித குழந்தை தெரேசாவிடம் அர்ப்பணிப்போம் என்று, ஹாஸ்டாக் (#ExtraordinaryMissionaryMonth) குடன், இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“சிறு சிறு அன்பு முயற்சிகள் வழியாக, கடவுள் மாபெரும் செயல்கள் ஆற்றுகின்றார், உலகின் மீட்பை நிறைவேற்றுகிறார், இன்று துவங்கும் சிறப்பு திருத்தூது மாதத்தை, நம் உண்மையான நண்பராகிய புனித குழந்தை தெரேசாவிடம் அர்ப்பணிப்போம்” என்ற சொற்களை, ஹாஸ்டாக் (#MissionaryOctober) குடன், இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறப்பு திருத்தூது மாதம் ஆரம்பம்

மேலும், அக்டோபர் 1, இச்செவ்வாய் மாலை 6 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மாலை திருப்புகழ்மாலை திருவழிபாடு நிறைவேற்றி, சிறப்பு திருத்தூது மாதத்தைத் துவங்கி வைக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2017ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக திருத்தூது ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மூவேளை செப உரையில்,  2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும், சிறப்பு திருத்தூது மாதமாகச் சிறப்பிக்கப்படும் என அறிவித்தார்.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் வெளியிட்ட Maximum Illud என்ற திருத்தூது மடலின் நூறாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கென, இந்த சிறப்பு திருத்தூது மாதத்தை அறிவிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்த நிகழ்வுக்குத் தயாரிப்புக்களை, குறிப்பாக, தலத்திருஅவைகள், துறவு நிறுவனங்கள், திருஅவை கழகங்கள், இயக்கங்கள், குழுமங்கள் மற்றும், ஏனைய திருஅவை சார்ந்த அமைப்புகளில், இம்மாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை, நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் கர்தினால் பெர்னான்டோ பிலோனி அவர்களிடம் ஒப்படைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த சிறப்பு மாதத்திற்கு, “உலகில், கிறிஸ்துவின் திருஅவையின் திருத்தூதுப்பணியாற்ற திருமுழுக்குப் பெற்றவர்கள் மற்றும், அனுப்பப்பட்டவர்கள்” என்ற தலைப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார்.

01 October 2019, 15:34