தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் செபமாலை செபிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் செபமாலை செபிக்கிறார்   (Vatican Media)

மறைபரப்புப்பணியாளர்களுக்காக செபமாலை செபிக்க...

செபமாலை, மறைபரப்புப்பணி, அமேசான் மாமன்றம், ஞாயிறு வாசகங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி, திருத்தந்தையின் மூன்று டுவிட்டர் செய்திகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செபமாலையின் மாதமென அழைக்கப்படும் அக்டோபர் மாதத்தையும், இதே மாதத்தின் மற்றொரு முக்கிய கருத்தான மறைபரப்புப்பணியையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 28, இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"செபமாலையின் மாதமான அக்டோபரின் இறுதி நாள்களில், இன்றைய திருஅவையின் மறைபரப்புப்பணிக்காக, குறிப்பாக, தங்கள் மறைபரப்புப்பணியில் பெரும் இடர்களைச் சந்திக்கும் ஆண், பெண் பணியாளர்களுக்காக செபமாலை செபிக்க உங்களை அழைக்கிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

மேலும், அக்டோபர் 27, ஞாயிறன்று, திருத்தந்தை வெளியிட்ட இரு டுவிட்டர் செய்திகள், ஞாயிறு நற்செய்தியையும், நிறைவுற்ற அமேசான் மாமன்றத்தையும் மையப்படுத்தி அமைந்திருந்தன.

"தனிப்பட்ட வாழ்விலும், திருஅவையின் வாழ்விலும் இறைவனை மையத்தில் வைக்கவேண்டும் என்ற தேவையை, அமேசான் மாமன்றத்தில் உணர்ந்தோம். ஏனெனில், நாம் வாழ்வதையே நம்மால் பறைசாற்றமுடியும்" என்ற சொற்களை, இஞ்ஞாயிறு வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், திருத்தந்தை பதிவு செய்தார்.

"இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வரிதண்டுபவரைக் காணும்போது, நம் அனைவருக்குமே மீட்பின் தேவை உள்ளது என்ற உண்மையிலிருந்து துவங்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறோம்" என்ற செய்தியை, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

28 October 2019, 14:08