தேடுதல்

Vatican News
ஐந்து அருளாளர்களை புனிதர்களாக அறிவித்த திருப்பலி ஐந்து அருளாளர்களை புனிதர்களாக அறிவித்த திருப்பலி  (Vatican Media)

விசுவாசப் பயணம் என்பது, நன்றியுரைத்தலிலேயே வாழ்வதாகும்

நம்மைக் குறித்தும், வருங்காலத்தைக் குறித்தும் நம்பிக்கையின்றி செயல்படும் நிலைகளிலிருந்தும், நம்மை முடக்கிப்போடும் பயங்களிலிருந்தும், பேராசைகளிலிருந்தும் குணம்பெற வேண்டியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் ஐந்து அருளாளர்களை புனிதர்களாக அறிவித்த இஞ்ஞாயிறு  திருப்பலியில், அந்நாளின் நற்செய்தி விவரித்த பத்து தொழு நோயாளர்கள் குணம் பெற்ற புதுமையை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் பல ஆயிரக்கணக்கான மக்கள் வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருக்க, திருத்தந்தை வழங்கிய மறையுரையில், குணம்பெற்ற தொழுநோயாளிகளின் விசுவாசப் பயணத்தைப் பற்றி எடுத்துரைத்து, அவர்கள் கூக்குரலிட்டு அழைத்தது, நடந்து சென்றது, மற்றும், நன்றியுரைத்தது, என்ற மூன்று படிநிலைகள் குறித்து விவரித்தார்.

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இந்த தொழுநோயாளர்கள், எவரையும் ஒதுக்கி வைக்காது வாரி அணைக்கும் இறைவனை நோக்கி தங்கள் குரலை எழுப்பி, உதவியை நாடுவது, நமக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மைக் குறித்தும், வருங்காலத்தைக் குறித்தும் நம்பிக்கையின்றி செயல்படும் நிலைகளிலிருந்தும், நம்மை முடக்கிப்போடும் பயங்களிலிருந்தும், பேராசைகளிலிருந்தும் நாம் குணம்பெற வேண்டியுள்ளது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கேட்கும்போதே இறைவன் குணப்படுத்துகிறார் என்பதால், விசுவாசத்தின் வாயிலாகிய செபத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இயேசுவின் முன் நின்றபோது தொழுநோயாளர்கள் குணம்பெறவில்லை, மாறாக, எருசலேமை நோக்கிய விசுவாச வாழ்வுப் பயணத்திலேயே அவர்கள் சுத்திகரிக்கப்பட்டனர் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழுநோயாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குழுவாக சென்றது, விசுவாசத்தில் நாமனைவரும் ஒன்றிணைந்து நடக்கவேண்டியதை காட்டி நிற்கின்றது என மேலும் கூறினார்.

நன்றியுரைத்தல் என்பது இப்பயணத்தில் இறுதிப்படியாக வருகிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  விசுவாசப்பயணத்தின் உச்சகட்டம் என்பது, தொடர்ந்து நன்றியுரைத்தலிலேயே வாழ்வதாகும் என மேலும் கூறினார்.

புதிதாக புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கர்தினால்  John Henry Newman, இந்திய அருள்சகோதரி Marian Thresia, இத்தாலியின் அருள்சகோதரி Giuseppina Vannini, பிரேசிலின் அருள்சகோதரி Dulce Lopes Pontes, சுவிட்சர்லாந்தின் Marguerite Bays ஆகிய ஐவருக்காவும் இறைவனுக்கு நன்றி கூறுவோம் எனவும் கூறினார் திருத்தந்தை.

13 October 2019, 12:30