தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் புதிய நூல், "நமது பூமித்தாய்" திருத்தந்தையின் புதிய நூல், "நமது பூமித்தாய்"  

"நமது பூமித்தாய்" திருத்தந்தையின் புதிய நூல் வெளியீடு

இவ்வுலகம் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்பதை மறந்து, பேராசையால், உலகத்தை அபகரிக்கும் கலாச்சாரம் ஆட்சி செய்வதால், நாம் அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டியுள்ளது - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தையும், அங்கு வாழும் வறியோரையும் காப்பாற்றும் நோக்கத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலையும், அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்றம் நிறைவடையும் தருணத்தையும் நினைவுறுத்தும் வகையில், சுற்றுச்சூழலை மையப்படுத்தி, திருத்தந்தை எழுதியுள்ள ஒரு புதிய நூல், அக்டோபர் 24, இவ்வியாழனன்று வெளியானது.

பூமியை ஒரு தாயாக உருவகப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நமது பூமித்தாய். சுற்றுச்சூழல் விடுக்கும் சவாலை ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்துடன் வாசித்தல்" ("Our Mother Earth. A Christian reading of the challenge of the environment") என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்நூலை, வத்திக்கான் நூலகம் வெளியிட்டுள்ளது.

இந்நூலுக்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில், கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையும், கத்தோலிக்கத் திருஅவையும் இணைந்து மேற்கொண்டுவரும் முயற்சிகளை நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், 2015ம் ஆண்டு முதல், படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளில், இவ்விரு திருஅவைகளும் இணைந்துவந்திருப்பது, படைப்பைப் பாதுகாத்து, வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்கும் கரிசனையை வெளிப்படுத்துகிறது என்பதை, முதுபெரும் தந்தை, முதலாம் பார்த்தலோமேயு அவர்கள், தன் அணிந்துரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வுலகம் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்பதை மறந்து, பேராசையால், உலகத்தை அபகரிக்கும் கலாச்சாரம் ஆட்சி செய்வதால், நாம் அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டியுள்ளது என்று, திருத்தந்தை, இந்நூலில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

வாழ்வை அச்சுறுத்தும் பிரச்சனைகளை, வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளாக மட்டும் கண்ணோக்கி, மேலோட்டமான தீர்வுகளைக் காண்பதற்குப் பதில், ஒட்டுமொத்த மனித சமுதாயமும், உள்ளார்ந்த மனமாற்றம் பெறவேண்டும் என்றும், இந்த மனமாற்றம் மன்னிப்பு வேண்டுவதில் துவங்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நூலில் விளக்கியுள்ளார்.

24 October 2019, 14:44