தேடுதல்

Vatican News
அமேசான் பகுதியை மையப்படுத்தி ஆயர்கள் சிறப்பு மாமன்றம் அமேசான் பகுதியை மையப்படுத்தி ஆயர்கள் சிறப்பு மாமன்றம்  (AFP or licensors)

pachamama சிலைகள் ஆற்றில் எறியப்பட்டதற்கு திருத்தந்தை மன்னிப்பு

ஊடகங்களின் மிகுந்த கவனத்தை உருவாக்கியுள்ள pachamama சிலைகள் சேதமடையாமல், டைபர் நதியிலிருந்து மீட்கப்பட்டு, இத்தாலிய தேசிய காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய சிலைகள், உரோம் டைபர் நதியில் எறியப்பட்டது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 25, இவ்வெள்ளி மாலையில் நடைபெற்ற 15வது பொது அமர்வில் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

எவ்வித சிலைவழிபாட்டு நோக்கங்களின்றி, Traspontina ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த pachamama சிலைகள் அகற்றப்பட்டு, டைபர் நதியில் எறியப்பட்டது பற்றி ஒருசில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன் என்று கூறியத் திருத்தந்தை, உரோம் ஆயர் என்ற முறையில், இந்த அடையாளத்தின் வழியாக, புண்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்தார்.

ஊடகங்களில் இவ்வளவு கவனத்தை உருவாக்கியுள்ள இந்த சிலைகள் சேதமடையாமல், டைபர் நதியிலிருந்து மீட்கப்பட்டு, இத்தாலிய தேசிய காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் திருத்தந்தை அறிவித்தார்.

அமேசான் பகுதியில், கருவுற்ற பெண்களை ஆடையில்லாமல் வடிக்கப்பட்டுள்ள இந்த சிலைகள், உரோம் Santa Maria in Traspontina கார்மேல் சபை ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு, அமேசான் மாமன்றத்தின் பல்வேறு நிகழ்வுகளில் வைக்கப்பட்டன.

இந்த சிலைகள் அக்டோபர் 21ம் தேதி டைபர் நதியில் இருவரால் எறியப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவை மீட்கப்பட்ட செய்தி, உரியவர்களிடம் தெரிவிக்கப்பட்ட பின்னரே, பொதுவில் அறிவிக்கப்பட வேண்டுமென, காவல்துறை தலைமை அதிகாரி விரும்பினார் எனவும் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை, அமேசான் மான்றத்தை, அசிசி நகர் புனித பிரான்சிசிடம் அர்ப்பணித்த நிகழ்வில் இந்த சிலைகள் வைக்கப்பட்டிருந்தன மற்றும், இவை சர்ச்சையையும் ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. 

26 October 2019, 15:28