தேடுதல்

Vatican News
அசிசி நகர் புனித பிரான்சிஸ் அசிசி நகர் புனித பிரான்சிஸ்  

அமேசான் ஆயர்கள் மாமன்றம், அசிசி புனித பிரான்சிசிற்கு அர்ப்பணம்

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களை, சூழலியல் ஆர்வலர்களின் பாதுகாவலர் என, 1979ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அறிவித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் விழாவாகிய அக்டோபர் 4, வருகிற வெள்ளி பகல் 12.30 மணியளவில், வத்திக்கான் தோட்டத்தில் நடைபெறும் நிகழ்வில், படைப்பின் காலத்தைக் கொண்டாடி, அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தை, அசிசி புனித பிரான்சிஸ் அவர்களுக்கு அர்ப்பணிப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து, அக்டோபர் மாதம் 4ம் தேதி வரை, ஒவ்வோர் ஆண்டும், படைப்பின் காலம் கொண்டாடப்பட வேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதன் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த இவ்வாண்டு நிகழ்வு, வருகிற வெள்ளியன்று நிறைவுபெறுகின்றது.

இந்நிகழ்வில், சூழலியல் பாதுகாப்பைக் குறிக்கும் முறையில் ஒலிவ மரக்கன்றையும் திருத்தந்தை நடுவார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களை, சூழலியல் ஆர்வலர்களின் பாதுகாவலர் என அறிவித்த நாற்பதாம் ஆண்டு நிறைவு நாளுக்குமுன்னர், இக்கொண்டாட்டம் இடம்பெறுகின்றது. அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், சூழலியல் ஆர்வலர்களின் பாதுகாவலர் என, 1979ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அறிவிக்கப்பட்டார்.  

800ம் ஆண்டு நிறைவு

அசிசி நகர் புனித பிரான்சிசும், சுல்தான் அல்-மாலிக் அல்-கமில் அவர்களும் எகிப்து நாட்டில் சந்தித்த 800ம் ஆண்டு நிறைவு நிகழ்வையொட்டி, எருசலேமில், செப்டம்பர் 30, இத்திங்களன்று, பல்வேறு நிகழ்வுகள் துவங்கியுள்ளன.

இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள அருள்பணி Narcyz Klimas அவர்கள், கடந்த ஆண்டு முதலே ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இத்தனை பேர் ஆர்வமுடன் பங்குகொள்வார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

இத்தாலியின் அசிசி நகர் புனித பிரான்சிஸ் முதன்முதலில், மனிதர்கள் மற்றும், உயிருள்ள விலங்குகளால், குடில் அமைத்த கிரேச்சாவை, பெத்லகேமுடன் தொடர்புபடுத்தியும், லா வெர்னாவுடன் கல்வாரியைத் தொடர்புபடுத்தியும், இவையனைத்தும் அசிசி மன்னிப்பை மையப்படுத்தி சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

அரபு இலக்கிய பேராசிரியர்கள், ஆயர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் இந்நிகழ்வில் தங்களின் பங்களிப்பை அளிக்கின்றனர்.

ஒரு வாரம் நடைபெறும் இந்நிகழ்வில், அக்டோபர் 2, இப்புதன் காலையில், கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களும், சுல்தான் அல் கமில் அவர்களும் சந்தித்ததன் பொருள் பற்றி விளக்குவார். (Agencies)

01 October 2019, 15:50