தேடுதல்

Vatican News
சிலே நாட்டில் நடைபெற்றுவரும் போராட்டம் சிலே நாட்டில் நடைபெற்றுவரும் போராட்டம்  (AFP or licensors)

சிலே நாட்டைக் குறித்து கவலை வெளியிட்ட திருத்தந்தை

சிலே நாட்டில் நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்படும் என்றும், அனைத்து மக்களுக்கும் நன்மை தரும் முடிவுகள், உரையாடல் வழியே, உருவாகும் என்றும் நான் நம்புகிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிலே நாட்டில் நிகழ்வனவற்றை நான் கவலையோடு கவனித்து வருகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 23, இப்புதனன்று வழங்கிய பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

சிலே நாட்டில் நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்படும் என்றும், அனைத்து மக்களுக்கும் நன்மை தரும் முடிவுகள், உரையாடல் வழியே, உருவாகும் என்றும் நான் நம்புகிறேன் என்ற சொற்கள் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

மெட்ரோ இரயில் கட்டண உயர்வை எதிர்த்து, பள்ளி மாணவர்களால் ஆரம்பமான போராட்டம், அண்மைய சில நாட்களாக, வன்முறை, சூறையாடுதல் ஆகிய வழிகளில் வெளிப்பட்டதால், தலைநகர் சந்தியாகோவில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை, நாட்டின் பல பகுதிகளிலும் அமலானது.

இதுவரை, அந்நாட்டில் 15க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும், 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

அக்டோபர் 22ம் தேதி, சிலே நாட்டின் அரசுத்தலைவர், Sebastián Piñera அவர்கள், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் என்றும், தற்போதைய சமுதாய பிரச்சனைகளை தகுந்த வழியில் தீர்த்து வைப்பதாக வாக்களித்தார் என்றும், ஊடகங்கள் மேலும் கூறுகின்றன.

இதற்கிடையே, சிலே நாட்டிற்கு நல்லது நிகழவேண்டும் என்று விரும்பும் அனைத்து தரப்பினரும் தங்கள் வன்முறை வழிகளைக் கைவிட்டு, உரையாடல் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் உயர் நிலைக் காவலர், Michelle Bachelet அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

போராட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பலருக்கு சட்டரீதியான உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதும், சிறைகளில் அடைபட்டிருப்போரில் பலர் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதும், ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல்கள் என்று, ஐ.நா. அதிகாரி Bachelet அவர்கள் கூறியுள்ளார்.

23 October 2019, 11:30