தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையின்போது - 061019 மூவேளை செப உரையின்போது - 061019  (ANSA)

திருத்தந்தை: பணி மனப்பான்மையில் விசுவாசத்தை வாழ்வோம்

நம்பிக்கையுள்ள மனிதர், எந்த எதிர்பார்ப்புமின்றி, கடவுளின் திட்டத்திறுகு முழுமையாகச் சரணடைவார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 06, இஞ்ஞாயிறு காலையில், அமேசான் பற்றிய, சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தை துவக்கி வைத்த திருப்பலியை நிறைவேற்றியபின், பகல் 12 மணிக்கு,  வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த முப்பதாயிரத்திற்கு அதிகமான விசுவாசிகளுக்கு, மூவேளை செப உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடுகு விதை

இஞ்ஞாயிறு நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள, கடுகு விதை, கடமையுணர்வுள்ள பணியாள் ஆகிய இரு உருவகங்களை மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடுகு விதை உருவகம் வழியாக, நம்பிக்கை உள்ளவர்களுக்கு இயலாதது எதுவுமே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளுமாறு, இயேசு விரும்புகிறார் என்று கூறினார்.

நம் சொந்த சக்தியைச் சார்ந்திராமல், எல்லாவற்றையும் செய்ய இயலுகின்ற கடவுளில் முழுமையாக நம்பிக்கை வைக்கவும் இயேசு விரும்புகிறார் என்று கூறினார், திருத்தந்தை.

சிறிய கடுகு விதையை நம்பிக்கையோடு ஒப்பிட்டுப் பேசியதன் வழியாக, நம்பிக்கை என்பது, பெருமை மற்றும் தன்னம்பிக்கை அல்ல, மாறாக, தாழ்ச்சியில், கடவுள், நம் வாழ்வுக்கு அதிகம் தேவை என்பதை உணர்வதாகும் என, இயேசு நமக்குக் காட்டுகிறார் என்று கூறினார்.

முதல் உருவகத்தில், “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, “நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்” எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும் என்று ஆண்டவர் கூறியுள்ளார் எனவும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பணி, நம்பிக்கையின் அளவுகோல்

கடமையுணர்வுள்ள பணியாள் பற்றிய உருவகத்தில், நாம் உண்மையிலேயே கடவுளில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை, நம் பணியின் வழியாக அறிந்துகொள்ளலாம் என்றும் திருத்தந்தை கூறினார்.

இடையை வரிந்துகட்டிக்கொண்டு, தலைவர் உண்டு குடிக்கும்வரை பணிவிடை செய்யும் பணியாளர் பற்றி, அதாவது, எந்நேரமும் பணிவிடைபுரியத் தயாராக இருக்கும் அந்த பணியாளரின் மனநிலை பற்றி விளக்கிய இயேசு, நம்பிக்கையுள்ள மனிதர், கடவுளோடு எத்தகைய உறவைக் கொண்டிருக்க வேண்டுமென விளக்குகிறார் என்று திருத்தந்தை கூறினார்.

பொம்பை அன்னை மரியா

நம்பிக்கையுள்ள மனிதர், எந்த எதிர்பார்ப்புமின்றி, கடவுளின் திட்டத்திறுகு முழுமையாகச் சரணடைவார் என்றுரைத்த திருத்தந்தை, இவ்வுரையின் இறுதியில், அக்டோபர் 07, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட, செபமாலை அன்னை மரியாவிடம் செபித்தார்.

அமேசான் பற்றிய, சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்திற்காகத் தூய ஆவியாரிடம் செபிக்குமாறும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகள் எல்லாரையும் கேட்டுக்கொண்டார்.

06 October 2019, 12:51