தேடுதல்

Vatican News
அமேசான் மாமன்ற நிறைவுத் திருப்பலி  அமேசான் மாமன்ற நிறைவுத் திருப்பலி   (Vatican Media)

மாமன்ற நிறைவுத் திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை

ஞாயிறு வாசகங்கள் வழங்கிய, ஏழையின் செபம், பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் எழுப்பிய செபம் ஆகியவற்றையும், இவற்றில் இறைவனுக்கு ஏற்புடைய செபம் எது என்பதையும், தன் மறையுரையின் மையப்பொருளாக வழங்கினார் திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவேண்டலில் ஈடுபட்டிருக்கும் மூவரை, இன்றைய இறை வாக்கு நமக்கு வழங்கி, அவர்கள் வழியே இறைவேண்டலைக் குறித்து நாம் கற்றுக்கொள்ள உதவுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

மாமன்ற நிறைவுத் திருப்பலி

அமேசான் பகுதியை மையப்படுத்தி, அக்டோபர் 6ம் தேதி வத்திக்கானில் துவங்கிய ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் நிறைவுத் திருப்பலியை, அக்டோபர் 27, இஞ்ஞாயிறு காலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

இந்த ஞாயிறு வழிபாட்டின் வாசகங்களில் வழங்கப்பட்ட, ஏழையின் செபம், பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் எழுப்பிய செபம் ஆகியவற்றையும், இவற்றில் இறைவனுக்கு ஏற்புடைய செபம் எது என்பதையும் தன் மறையுரையின் மையப்பொருளாக வழங்கினார்.

பரிசேயரின் செபம்

இறைவனுக்கு நன்றி கூறுவதாக தன் செபத்தைத் துவங்கிய பரிசேயர், செபங்களிலேயே மிகச் சிறந்த வடிவமான நன்றி செபத்துடன் துவங்கினார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, தான் ஏனையவர்களைவிட உயர்ந்திருப்பதற்காக பரிசேயர் தன் நன்றியை வெளிப்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார்.

தன்னை மற்றவர்களிடமிருந்து பிரித்து, அவர்களைவிட்டு தூரத்தில் நின்று, தன்னைக்குறித்த எண்ணங்களில் ஈடுபட்டிருந்த பரிசேயர், இறைவனையும், அடுத்தவரையும் மறந்துவிட்டு, தன்னையே ஆராதிக்க ஆரம்பித்தார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணுபவர்கள், இவ்வுலகில் வேற்றுமைகள், வன்முறைகள் சுரண்டல்கள் ஆகிய எதிர்மறைச் செயல்களுக்கு வழி வகுக்கின்றனர் என்ற எச்சரிக்கையை திருத்தந்தை தன் மறையுரையில் விடுத்தார்.

அமேசான் பகுதியில் ஆழமான பாதிப்புக்கள்

தங்கள் கலாச்சாரம் உயர்ந்ததென்ற மமதையால், பழங்குடியினரின் கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் மதிக்காமல் செயல்பட்டவர்கள், அமேசான் பகுதியில் ஆழமான பாதிப்புக்களை உருவாக்கியுள்ளனர் என்பதையும், திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

நம்மையே உயர்வானவர்களாக கருதி மற்றவர்களை ஏளனமாகக் கருதும் மனநிலை இறைவனுக்கு ஏற்புடையது அல்ல என்ற எச்சரிக்கையை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய மனநிலையிலிருந்து இறைவன் நம்மை குணமாக்க வேண்டுமென்று செபிப்போம் என்று அழைப்பு விடுத்தார்.

வரிதண்டுபவரின் செபம்

தன் ஏழ்மையை, பாவ நிலையை, இறைவனுக்கு முன் உணர்வதில், வரிதண்டுபவரின் செபம் ஆரம்பமானது என்று கூறிய திருத்தந்தை, இவரது செபம் உள்ளத்திலிருந்து உருவானது என்பதையும், அதனால், இறைவனுக்கு விருப்பமாக அமைந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.

தனது நிலையைக் குறித்து எவ்வித தவறான மதிப்பீடுகளும், சாக்குபோக்கும், சொல்லாமல், உள்ளதை உள்ளவாறே கூறிய வரிதண்டுபவரின் செபம், இறைவனை நோக்கி உயர்ந்தது என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

ஏழையின் செபம்

மற்றவர்களோடு தங்களை ஒப்பிடாமல், இறைவனே தங்கள் செல்வம் என்பதை உணர்ந்தவர்களாய், ஏழைகள் எழுப்பும் செபம், "முகில்களை ஊடுருவிச் செல்லும்; இறைவனை நேரில் சென்றடையும்" என்பதை சீராக்கின் ஞானம் கூறுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

நடந்து முடிந்த அமேசான் சிறப்பு மாமன்றத்தின்போது, ஏழைகளின் குரலைக் கேட்கவும், பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது வேதனைகளைப் புரிந்துகொள்ளவும் இறைவன் வழங்கிய வாய்ப்புக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் நன்றி கூறினார்.

ஏழைகளின் குரலோடு நமது குரலையும் இணைத்து செபிக்கும்போது, நமது செபங்களும் முகில்களை ஊடுருவிச் சென்று, இறைவனிடம் சேரும் என்று கூறி, திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

28 October 2019, 13:44