தேடுதல்

Vatican News
தாய்லாந்து திருத்தூதுப் பயண இலச்சினை தாய்லாந்து திருத்தூதுப் பயண இலச்சினை 

32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயண விவரங்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயண நிகழ்வுகளின் மையக் கருத்து அமைதி என்பதாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற நவம்பர் 19ம் தேதி முதல், 26ம் தேதி வரை, தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளில் மேற்கொள்ளும், திருத்தூதுப் பயணம் பற்றிய விவரங்களை, அக்டோபர் 2, இப்புதனன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

நவம்பர் 19ம் தேதி செவ்வாய் உரோம் நேரம் இரவு ஏழு மணிக்கு, உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து பாங்காக் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 20ம் தேதி, பாங்காக் நேரம் பகல் 12.30 மணிக்கு அந்நகர் செல்வார். விமான நிலையத்திலேயே அரசு வரவேற்பு மரியாதையும் திருத்தந்தைக்கு வழங்கப்படும்.

நவம்பர் 21ம் தேதி, பாங்காக் நகரில் பிரதமர் சந்திப்பு, அரசு, தூதரக, மற்றும், ஏனைய அதிகாரிகள் சந்திப்பு, புத்தமதத் தலைவர் சந்திப்பு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் சந்திப்பு, அன்று மாலையில் தாய்லாந்து அரசர் சந்திப்பு, தேசிய அரங்கத்தில் திருப்பலி போன்ற திருத்தந்தையின் நிகழ்வுகள் நடைபெறும்.  

நவம்பர் 22ம் தேதி, தாய்லாந்து நாட்டு அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் சந்திப்பு, தாய்லாந்து மற்றும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பினர் சந்திப்பு, இயேசு சபையினர் சந்திப்பு, பல்சமயத் தலைவர்கள் சந்திப்பு, இளையோர்க்குத் திருப்பலி போன்ற நிகழ்வுகளை நிறைவேற்றும் திருத்தந்தை, நவம்பர் 23ம் தேதி காலையில், தாய்லாந்திலிருந்து ஜப்பானுக்குச் செல்வார்.

ஜப்பானில் திருத்தூதுப் பயணம்

நவம்பர் 23ம் தேதி ஜப்பான் நேரம் மாலை 5.40 மணிக்கு டோக்கியோ நகர் செல்லும் திருத்தந்தை, அன்று திருப்பீட தூதரகத்தில் ஆயர்களைச் சந்திப்பார்.

24ம் தேதி, நாகசாகி நகருக்குச் செல்லும் திருத்தந்தை, அணு குண்டு தாக்கப்பட்ட இடத்தில் செய்தியை வழங்கி, புனித மறைசாட்சிகளுக்கு மரியாதை செலுத்துவார்.

அன்று பிற்பகலில், கால்பந்து அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், மாலை 4.35 மணிக்கு, ஹிரோசிமா நகருக்குப் புறப்படும் திருத்தந்தை, அந்நகர் அமைதியின் நினைவிடத்தில் செய்தி வழங்குவார். பின் அங்கிருந்து டோக்கியோ செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 25ம் தேதி, டோக்கியோவில், மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தல், பேரரசர் மாளிகை செல்லல், டோக்கியோ பேராலயத்தில் இளையோரைச் சந்தித்தல், திருப்பலி நிறைவேற்றல், பிரதமர் மற்றும், ஜப்பானிய அரசு, தூதரக, மற்றும், ஏனைய அதிகாரிகளைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

நவம்பர் 26ம் தேதி செவ்வாயன்று, அருள்பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளைச் சந்தித்தபின், சோஃபியா பல்கலைக்கழகம் செல்லும் திருத்தந்தை, ஜப்பான் நாட்டிலிருந்து பிரியாவிடை பெற்று, உரோம் நகருக்குப் புறப்படுவார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், அவரின் 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகும்.

02 October 2019, 15:51