தேடுதல்

Vatican News
அமேசான் மாமன்ற நிறைவுத் திருப்பலி  அமேசான் மாமன்ற நிறைவுத் திருப்பலி  

நவம்பர் முதல், சனவரி முடிய திருத்தந்தையின் நிகழ்வுகள்

இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல், அடுத்த ஆண்டு சனவரி மாதம் முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல், அடுத்த ஆண்டு சனவரி மாதம் முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளின் தொகுப்பை, திருப்பீடத்தின் திருவழிபாட்டுத் துறையின் தலைவர் அருள்பணி குயிதோ மரீனி அவர்கள், அக்டோபர் 28, இத்திங்களன்று வெளியிட்டுள்ளார்.

நவம்பர் நிகழ்வுகள்

இவ்வாண்டு இறையடி சேர்ந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியை, நவம்பர் 4, திங்களன்று, புனித பேதுரு பசிலிக்காவில், காலை 11.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

நவம்பர் 17, பொதுக்காலத்தின் 33வது ஞாயிறன்று, உலக வறியோர் நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புத் திருப்பலியாற்றுவார்.

நவம்பர் 19ம் தேதி முதல் 26ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தாய்லாந்து மற்றும் ஜப்பானில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார்.

டிசம்பர் நிகழ்வுகள்

டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை மரியாவின் திருநாளன்று, உரோம் நகரின் இஸ்பானிய சதுக்கத்தில் அன்னை மரியாவின் உருவத்திற்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் திருத்தந்தை, டிசம்பர் 12, வியாழனன்று, குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாளன்று, மாலை 6 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலியை நிகழ்த்துவார்.

டிசம்பர் 24, செவ்வாய் இரவு புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இரவு 9.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று நண்பகலில், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தின் மேல்மாடத்திலிருந்து “Urbi et Orbi” சிறப்புச் செய்தியையும், ஆசீரையும் வழங்குவார்.

2020ம் ஆண்டு சனவரியில்...

டிசம்பர் 31, ஆண்டின் இறுதி நாளன்று, மாலை 5 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவில் 'தே தேயும்' நன்றி வழிபாட்டினை முன்னின்று நடத்தும் திருத்தந்தை, 2020ம் ஆண்டின் புத்தாண்டு நாளன்று மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவையும், உலக அமைதி நாளையும் சிறப்பிக்க, காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றுவார்.

சனவரி 6, திருக்காட்சிப் பெருவிழாவன்று, காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 12, ஞாயிறன்று சிஸ்டின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, குழந்தைகள் சிலருக்கு திருமுழுக்கு வழங்குவார்.

28 October 2019, 13:53