தேடுதல்

Vatican News
கத்தோலிக்க இராணுவ ஆன்மீகப்பணியாளர்களுடன் திருத்தந்தை கத்தோலிக்க இராணுவ ஆன்மீகப்பணியாளர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

கத்தோலிக்க இராணுவ ஆன்மீகப்பணியாளர்களுடன் திருத்தந்தை

போர்க்களங்களில், மிகக் கொடுமையான சூழல்களில் பணியாற்றும் இராணுவ ஆன்மீகப் பணியாளர்கள், "சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" (மத்.25:36) என்று இயேசு கூறியச் சொற்களால் வழிநடத்தப்பட வேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இராணுவங்களில் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டிருப்போர், போர்ச் சூழலில் தாங்கள் சந்திக்கும் மனிதர்களில் யாரையும் எதிரிகளாகக் கண்ணோக்காமல், அவர்கள் அனைவருமே, உள்ளார்ந்த மாண்புடைய மனிதர்கள் என்ற கண்ணோட்டம் கொண்டிருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கூறினார்.

கத்தோலிக்க இராணுவ ஆன்மீகப்பணியாளர்களின் ஐந்தாவது பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட அருள்பணியாளர்களை, அக்டோபர் 31, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடினமானச் சூழல்களில் பணியாற்றும் அனைவரையும் பாராட்டினார்.

ஆயர்களின் பேராயம் உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு கருத்தரங்கிற்கு "ஆயுதம் தாங்கிய மோதல்களில் தனிப்பட்ட சுதந்திரத்தின் இழப்பு: இராணுவ ஆன்மீகப்பணியாளரின் பொறுப்பான பணி" என்ற தலைப்பு தெரிவு செய்யப்பட்டதை சிறப்பாக நினைவுகூர்ந்த திருத்தந்தை, இன்றைய உலகில் போர்ச் சூழல்களில் மனிதர்கள் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை பெருமளவு இழந்திருப்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

போர்களிலும், மோதல்களிலும் கைது செய்யப்படுவோர், பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கைது செய்யப்படும் அருள்பணியாளர்கள், மற்றும் துறவியர், கொல்லப்படுவது அல்லது, காணாமல் போவது, அதிக அளவில் நடைபெறுவது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

போர்க்களங்களில், மிகக் கொடுமையான சூழல்களில் பணியாற்றும் இராணுவ ஆன்மீகப் பணியாளர்கள், "சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" (மத். 25:36) என்று இயேசு கூறியச் சொற்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்று, திருத்தந்தை, தன் உரையில் விண்ணப்பித்தார்.

போர்க்களத்தில் உதவி தேவைப்படும் அனைவருக்கும், அவரது நாடு, இனம், மொழி, மதம் கலாச்சாரம் என்ற எவ்வித பாகுபாடுகளையும் மனதில் கொள்ளாமல், அவர்கள் அனைவரையும் அயலவர் அன்பு என்ற உலகளாவிய உண்மையை நோக்கி அழைத்துச் செல்வது, இராணுவ ஆன்மீகப் பணியாளர்களின் முக்கியப் பணி என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

'போர்க் காலங்களில், சாதாரண மக்களின் பாதுகாப்பு' என்ற கருத்தை வலியுறுத்தி, ஜெனீவாவில் 1949ம் ஆண்டு  நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தின் 70ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வாண்டில், உலகெங்கும், அனைத்துச் சூழல்களிலும் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை, திருப்பீடம் வலியுறுத்துகிறது என்ற உறுதிமொழியுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

31 October 2019, 14:14