தேடுதல்

Vatican News
Zimpeto தேசிய அரங்கத்தில் திருத்தந்தை திருப்பலி Zimpeto தேசிய அரங்கத்தில் திருத்தந்தை திருப்பலி 

Zimpeto தேசிய அரங்கத்தில் திருத்தந்தை திருப்பலி

மொசாம்பிக்கில் திருத்தந்தை - “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (லூக்.6:31) என்ற முதல் பொன்விதியை, இயேசு நம் ஒவ்வொருவருக்கும் பரிந்துரைக்கிறார்

மேரி தெரேசா - வத்திக்கான்

மப்புத்தோ புறநகரிலுள்ள Zimpeto எய்டஸ் நோயாளர் பராமரிப்பு மருத்துவமனையைப் பார்வையிட்டு, நோயாளிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்விடத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள Zimpeto தேசிய விளையாட்டு அரங்கத்திற்கு, திருப்பலி நிறைவேற்றச் சென்றார். அந்த அரங்கத்தில், ஏறத்தாழ அறுபதாயிரம் விசுவாசிகள், பலவண்ண ஆடைகளில் அமர்ந்திருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சற்றுமுன்பாக, Zimpeto மருத்துவமனையில் தனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட, மரத்தாலான செங்கோலுடன் திருப்பலி பவனியில் பங்கேற்றார், திருத்தந்தை. அச்சமயத்தில், பெண்கள் பவனி சென்ற இருபக்கங்களிலும் நின்றுகொண்டு, வருகைப்பாட்டிற்கு நடனமாடிக்கொண்டிருந்தனர். இவர்கள் எல்லாருமே, திருத்தந்தையின் உருவப்படம் பதிக்கப்பட்ட, கருமஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிந்திருந்தனர். அச்சமயம், அரங்கமே நளினத்துடன் ஆடிக்கொண்டிருந்தது. ஆப்ரிக்க மக்களிடமிருந்து நடனத்தைப் பிரிக்கவே முடியாது என்பதை இக்காட்சி தெளிவாக உணர்த்தியது. மழை பெய்ந்துகொண்டிருந்ததால் குடைகளையும் மக்கள் பிடித்திருந்தனர்.

“உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்” என்ற தலைப்பில், போர்த்துக்கீசிய மொழியில் இத்திருப்பலியை நிறைவேற்றினார், திருத்தந்தை. இத்திருப்பலிப்பீடத்தை அலங்கரித்திருந்த துணிகளில் திருத்தந்தையின் விருதுவாக்கு படங்கள் பதிக்கப்பட்டிருந்தன. மொசாம்பிக் மக்களின் முன்னேற்றம் கருதி, திருத்தந்தை, இத்திருப்பலியில், அமைதி, வறுமை, ஊழல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில், மறையுரையாற்றினார். இத்திருப்பலியின் இறுதியில், மொசாம்பிக் நாட்டினருக்கு நன்றி சொல்லி அனைவரையும் ஆசீர்வதித்தார். இத்திருப்பலியே, மொசாம்பிக் நாட்டில் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தின் இறுதி நிகழ்வாகும். இத்திருப்பலியின் மறையுரையை மையப்படுத்தி, இயேசு அனைவருக்கும் பரிந்துரைக்கும் பொன்விதியை, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார், திருத்தந்தை. “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (லூக்.6:31); என்ற முதல் பொன்விதியை, இயேசு நம் ஒவ்வொருவருக்கும் பரிந்துரைக்கிறார். மேலும், நம்மை அன்புகூர்தல் மற்றும், பிறருக்கு உதவுதல் என்ற மிக முக்கியமானதைக் கண்டுகொள்ளவும் இயேசு உதவுகிறார் என்ற சொற்களை, ஹாஸ்டாக்குடன் (#ApostolicJourney #Mozambique) தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

06 September 2019, 16:12