தேடுதல்

Vatican News
Zimpeto மருத்துவமனையில்  திருத்தந்தை Zimpeto மருத்துவமனையில் திருத்தந்தை  (AFP or licensors)

Zimpeto மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளர் சந்திப்பு

Zimpeto மருத்துவமனையில், 2002ம் ஆண்டிலிருந்து, ஏறத்தாழ 2 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கர்ப்பிணி அன்னையர்க்கு பிறக்கப்போகும் குழந்தைகள், இந்நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படாவண்ணம், சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 06, இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு, மப்புத்தோ திருப்பீட தூதரகத்திலிருந்து புறப்பட்டார். அவ்வில்லத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் உதவிகளுக்கு நன்றி சொல்லி, மொசைக் வேலைப்பாடுகளாலான, இத்திருத்தூதுப் பயண பதக்கத்தை, அவ்வில்லத்திற்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. மொசாம்பிக்கில், எண்பது விழுக்காட்டினர் உணவுப் பற்றாக்குறைவால், மிக வறியநிலையில் வாழ்கின்றவேளை, இவ்வெள்ளி காலையில், மப்புத்தோ நகரில் தனது இரண்டாவது நாள் பயண நிகழ்வுகளை துவக்கும்போதே, ஏழைகளை நாம் மறக்கக் கூடாது என்பதை, தன் டுவிட்டர் செய்தி வழியாக திருத்தந்தை கேட்டுக்கொண்டார். “இவர்களே, என் தந்தையின் பேறுபெற்றவர்கள் என்று, விண்ணகத்தில் தங்களுக்கு அருகில் பொறிக்கப்பட்டுள்ள, நம் மிக ஏழை சகோதரர், சகோதரிகளை மறவாதிருப்போம்” என்ற சொற்களை, ஹாஸ்டாக்குடன் (#ApostolicJourney #Mozambique) தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நாளின் முதல் நிகழ்வாக, மப்புத்தோவின் புறநகரிலுள்ள Zimpeto மருத்துவமனைக்குச் சென்றார் திருத்தந்தை. கத்தோலிக்கத் திருஅவை நடத்துகின்ற இம்மருத்துவமனை, 2018ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி, மொசாம்பிக் அரசுத்தலைவரின் பிரசன்னத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்ட அன்னையரும், குழந்தைகளும், இங்கு பராமரிக்கப்படுகின்றனர். 1992ம் ஆண்டில் மொசாம்பிக்கில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட உதவிய, உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பே இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட உதவியது. மொசாம்பிக் நாட்டில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் இங்கு, 2002ம் ஆண்டிலிருந்து, ஏறத்தாழ 2 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கர்ப்பிணி தாய்மார் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகள், இந்நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படாவண்ணம், சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில், வயதுவந்தவரில் 25 பேருக்கு ஒருவர், HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளனர் என, ஐ.நா.வின் AIDS கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. இந்த மருத்துவமனைக்கு, அன்னை மரியா குழந்தை இயேசுவைத் தாங்கியிருக்கும் அழகான படத்தை பரிசாக அளித்தார் திருத்தந்தை. Zimpeto மருத்துவமனைக்குச் சென்ற திருத்தந்தையை, சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் தலைவரும், கனவு என்ற மொசாம்பிக் நாட்டின் தேசிய திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், அந்த மருத்துவமனை இயக்குனரும் வரவேற்றனர். திருத்தந்தை Zimpeto மருத்துவமனையில் உரையொன்றும் ஆற்றினார். அதன் இறுதியில் Zimpeto மருத்துவமனையைப் பார்வையிட்ட திருத்தந்தை, 20 நோயாளிகளைக் கைகுலுக்கி வாழ்த்தினார். இந்நிகழ்வை நிறைவுசெய்து, அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள Zimpeto தேசிய விளையாட்டு அரங்கத்திற்கு, திருப்பலி நிறைவேற்றச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

06 September 2019, 16:27