தேடுதல்

Vatican News
Zimpeto மருத்துவ இல்லத்தில் திருத்தந்தை Zimpeto மருத்துவ இல்லத்தில் திருத்தந்தை  (ANSA)

Zimpeto மருத்துவமனை, கடவுளின் அன்பின் அடையாளம்

இறைவன் மீண்டும் திரும்பி வரும்போது, நற்பணிகளை ஆற்றியுள்ள அனைவரும் தங்கள் பலன்களைப் பெறுவர். Zimpeto மருத்துவ இல்லம், நம்பிக்கையின் பிறப்பிடமாக தொடரட்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

Zimpeto மருத்துவமனை, மரணமும் துன்பமும் அதிகமாகக் காணப்படும் இடங்களில் வாழ்வையும் நம்பிக்கையையும் கொணர எப்போதும் தயாராக இருக்கும் இறைவனின் அன்பின் அடையாளமாக உள்ளது. துன்புறும் எண்ணற்ற மக்களுக்கு, குறிப்பாக, எய்ட்ஸ் மற்றும் ஹெச்ஐவி நோய்க் கிருமிகளின் பாதிப்புக்களால் துன்புறும் மக்களுக்கு இம்மருத்துவ இல்லம் ஆற்றும் பணிகள் 'நல்ல சமாரியர்' உவமையை நினைவூட்டுவதாக உள்ளன.   'இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை', 'நாம் என்னதான் முயற்சி எடுத்தாலும் இத்துன்பங்களை அகற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது' என்றெல்லாம் சாக்குப்போக்குச் சொல்லி கடந்து போகாமல், துன்புறுவோரைக் கண்டவிடத்து நின்று உதவும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதாக இந்த மருத்துமனை உள்ளது. மற்றவர்களால் தீர்ப்பிடப்பட்டு, அவமானத்தில் குறுகி வாழும் எண்ணற்றப் பெண்களின் அழுகுரல்களுக்கு, அதாவது, வெளிப்படையாகக் கேட்காத அந்த குரல்களுக்கு நீங்கள் செவிமடுத்து அதற்கான தீர்வுகளைத் தேட முயன்றுள்ளீர்கள்.  சாலையோரத்தில் அடிபட்டுக் கிடந்த மனிதரைப்போல், புற்றுநோயாலும், காசநோயாலும், சத்துணவின்மையாலும் துன்புறும் மக்களிடையே, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளையோரிடையே, இறைவன் வாழ்கிறார். துன்புறுவோரின் அழுகுரல்கள் செவிமடுக்கப்படுவதில்லை, என யாரும் கூறாதவண்ணம், நீங்கள் ஒவ்வொருவரும் பணியாற்றுவது, இறைவனின் இதயத்தின் அடையாளமாக உள்ளது. உதவித் தேவைப்படுபவர் மீதான நம் அக்கறை வெறும் உதவிகளோடு நின்றுவிடக்கூடாது. அன்புடன்கூடிய அக்கறையுடன், அவர்களின் மாண்பை பெற்றுத் தருவதாகவும்,  அவர்களின் நல்லதொரு வருங்காலத்திற்கு பாதை அமைத்துக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். இன்றைய உலகின் ஏழ்மையின் அளவைப் பார்க்குபோது, நம்மிடமுள்ள ஆற்றலும், வளங்களும் குறைவாக இருப்பதை உணர்கிறோம். இங்கு ஒருவர் மற்றவரிடையேயான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

விசுவாசத்தாலும், கிறிஸ்தவ பிறரன்பாலும் தூண்டப்பட்டுள்ள நாம், இத்துன்பங்களை அகற்றும் நோக்கத்துடன் பணிபுரிய முன்வரும் அனைவரையும் அங்கீகரித்து ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். புகழைத் தேடாது தாழ்ச்சியில் வழங்கும் ஒத்துழைப்பு என்பது, நம் நற்செய்தி பதிலுரையாக இருக்க வேண்டும். சுய விருப்பப்பணியாளர்களாக முன்வந்து மற்றவர்களுக்கு உதவுவதும், தொலைத்தொடர்பு கருவிகள் வழியாக மருத்துவப் பயிற்சி வழங்குவதும் உலகின் பல்வேறு இடங்களில், பல ஆண்டுகளாக இடம்பெற்றுவருவது, மனிதாபிமான மற்றும், நற்செய்தி மதிப்பீடுகளின் வெளிப்பாடாக உள்ளது. நோயின் அறிகுறிகள் நிலத்திலும், நீரிலும், காற்றிலும், வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் காணப்படுகின்றன. நாம் வீசியெறியும் குப்பைகளின் பாரத்தை தாங்கி நிற்கிறது பூமி.

நல்ல சமாரியர் உவமையில், காயம்பட்டவரை நல்ல சமாரியர் கொணர்ந்து சத்திரத்தில் ஒப்படைத்து, செலவுக்கு பணமும் வழங்கி, திரும்பி வரும்போது மீதியைத் தருவதாகச் சொல்லிச் செல்கிறார். இங்கும், மாண்புடன்கூடிய குணப்படுத்தலால், பல ஆயிரக்கணக்கான குழந்தைகள், எய்ட்ஸ் மற்றும் ஹெச்ஐவி பாதிப்புக்களிலிருந்து நலம்பெற்றுள்ளனர். துன்பங்களிலிருந்து வெளிவந்துள்ள இவர்கள், பலருக்கு நம்பிக்கையின் அடையாளமாகவும் உள்ளனர். ஆதரவுக் கரங்களை எதிர்பார்த்து சாலையோரங்களில் துன்பங்களுடன் படுத்திருக்கும் மக்கள் உதவி பெற, இந்த குணம்பெற்றோர் தூண்டுதலாக இருக்க முடியும். இறைவன் மீண்டும் திரும்பி வரும்போது, நற்பணிகளை ஆற்றியுள்ள அனைவரும் தங்கள் பலன்களைப் பெறுவர். இந்த மருத்துவ இல்லம் நம்பிக்கையின் பிறப்பிடமாக தொடரட்டும்.

06 September 2019, 16:11