தேடுதல்

Vatican News
Soamandrakizay மைதானத்தில் திருப்பலி Soamandrakizay மைதானத்தில் திருப்பலி  (Vatican Media)

Soamandrakizay மைதானத்தில் திருப்பலி

நம் வாழ்வும், நம் திறமைகளும், கடவுளுக்கும், மனிதர்களின் பல ஆரவாரமற்ற கரங்களுக்கும் இடையே நெய்யப்பட்ட கொடைகளின் பலனாகும்.

மேரி தெரேசா - வத்திக்கான்

செப்டம்பர் 8, இஞ்ஞாயிறு, அன்னை மரியின் பிறப்பு விழா. ஆரோக்ய அன்னையின் திருவிழா. உலக எழுத்தறிவு தினம். இன்று மடகாஸ்கர் நாட்டு மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுவதற்காக, உள்ளூர் நேரம் காலை 9.30 மணியளவில், Soamandrakizay மைதானம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அமர்ந்திருந்த ஏறத்தாழ பத்து இலட்சம் விசுவாசிகளும், மஞ்சளும், வெண்மையும் கொண்ட வத்திக்கான் கொடிகளை ஆட்டிக்கொண்டிருந்தனர். இவர்கள் மத்தியில் திருத்தந்தை, திறந்த காரில் சென்றுகொண்டிருந்தபோது, பாடகர் குழு அழகாக வருகைப்பாடலைப் பாடியது.  மடகாஸ்கர் நாட்டு அரசுத்தலைவர், அவரது துணைவியார் உட்பட பல முக்கிய அதிகாரிகளும் இத்திருப்பலியில் பங்குபெற்றனர். பலிபீடத்தின் பின்புறமும் மஞ்சள் துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருளாளர்கள் Raphaël Louis Rafiringa, Victoire Rasoamanarivo ஆகிய இருவரின் திருப்பண்டங்களும் வைக்கப்பட்டிருந்தன.

பொதுக்காலம் 23ம் ஞாயிறு, நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, திருத்தந்தை மறையுரையாற்றினார். இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடப்பது மிகவும் சவால் நிறைந்து. மிக மோசமான அடிமைத்தனத்தில், தனக்காக வாழ்வதும் ஒன்றாகும். தனது சிறிய உலகில், வாழ்வை முடக்கிவிடாமல், புதிய வாழ்வை அனுபவிப்பதற்கு, மற்றவருக்கு உதவுவதற்குத் திறந்த மனம் கொண்டிருக்க வேண்டும் என்றார், திருத்தந்தை.    

மடகாஸ்கர் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான பிரெஞ்ச் மொழியில் இத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருநற்கருணை வழங்கப்பட்ட பின்னர், மஞ்சளும், வெண்மை நிற ஆடைகளில் ஒரு குழு, திருத்தந்தையின் உருவப்படம் பதித்த ஆடைகளை அணிந்த மற்றொரு குழு என, மூன்று குழுக்கள் அழகாக நடன நிகழ்வை நடத்தின. திருப்பலியின் இறுதியில் அந்நகரின் பேராயர் திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். அதற்குப்பின்னும் நடன நிகழ்வு நடந்தது. திருப்பலி முடிந்தும், விசுவாசிகள் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தனர். கார்மேகம் சூழந்து, காற்றும் அடித்துக்கொண்டிருந்தது. இத்திருப்பலி மறையுரையை மையப்படுத்தி, ஹாஸ்டாக்குடன் ஒரு டுவிட்டர் செய்தியையும் திருத்தந்தை வெளியிட்டார். “நம் வாழ்வும், நம் திறமைகளும், கடவுளுக்கும், மனிதர்களின் பல ஆரவாரமற்ற கரங்களுக்கும் இடையே நெய்யப்பட்ட கொடைகளின் பலனாகும். இம்மனிதர்களின் பெயர்களை, விண்ணகத்தில் மட்டுமே நாம் அறியவருவோம்” என்ற சொற்களை, ஹாஸ்டாக் (#ApostolicJourney #Madagascar) குடன், தன் டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை வெளியிட்டுள்ளார். இத்திருப்பலியில் அன்னை மரியாவின் திருவுருவத்தையும் திருத்தந்தை அர்ச்சித்தார்.

மூவேளை செப உரை

இத்திருப்பலிக்குப் பின்னர் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மடகாஸ்கர் அரசுத்தலைவருக்கும், அதிகாரிகளுக்கும், நன்றியுரையாற்றிய பேராயர் Razanakolona அவர்களுக்கும், ஏனைய ஆயர்கள், அருபணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் என எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார். இத்திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த அருளாளர்கள் Raphaël Louis Rafiringa, Victoire Rasoamanarivo ஆகிய இருவரின் பரிந்துரையையும் உங்களுக்காக இறைஞ்சுகிறேன். இன்று அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழாவைச் சிறப்பிக்கிறோம். அமல அன்னையைப் பாதுகாவலராகக் கொண்டிருக்கும் மடகாஸ்கர் நாட்டில், அமைதி மற்றும், நம்பிக்கையின் பயணத்தில் அன்னை துணை வருவாராக என்றார். இறுதியில் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழாவையொட்டி, ஹாஸ்டாக் (#Angelus)  குடன், தன் டுவிட்டர் செய்தியில் எழுதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித சமுதாயத்தின் விடியற்காலையாகிய புனித கன்னி மரியாவின் பிறப்பு நினைவுகூரப்படும் இந்நாளில், அன்னை மரியாவிடம் செபிப்போம்“ என்ற சொற்களை வெளியிட்டுள்ளார்.

08 September 2019, 13:53