தேடுதல்

Vatican News
உரோம் மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை உரோம் மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை 

குணப்படுத்தி, நம்பிக்கை வழங்குபவர் தூய ஆவியானவர்

திருத்தூதுப்பயணம் வெற்றியடைய உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, அன்னை மரியாவிடம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

விக்டர்தாஸ் – வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வின் வேதனை நிறைந்த நினைவுகளுக்கு மருந்திட்டு குணப்படுத்துகிறவர் தூய ஆவியார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

“தூய ஆவியானவரை, நம் காயங்களுக்குள் அழைக்கும்போது, நம் வேதனையான நினைவுகளை, நம்பிக்கை எனும் எண்ணெயால் தடவி குணப்படுத்துகிறார், ஏனெனில், தூய ஆவியார், நம்பிக்கையை வழங்குபவர்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 3, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 3, இச்செவ்வாய் முடிய, @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,103 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, வெளியிடப்படும் புகைப்படங்கள், மற்றும், காணொளிகள் அடங்கிய instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 753 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேரி மேஜர் பசிலிக்காவில் செபம்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 4, இப்புதனன்று, மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீஷியஸ் ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு, ஒரு வாரம் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, செப்டம்பர் 03, இச்செவ்வாய் காலையில், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, அன்னை மரியாவிடம் செபித்தார்.

வெளிநாடுகளுக்கு திருத்தூதுப் பயணங்களைத் தொடங்குவதற்கு முன்னும், அவற்றை நிறைவுசெய்து திரும்பும்வேளையிலும், உரோம், மேரி மேஜர் பசிலிக்காவிலுள்ள Salus Populi அன்னை மரியாவிடம் சென்று, மலர்களை அர்ப்பணித்து, செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 4, இப்புதன், உரோம் நேரம் காலை 7.20 மணிக்கு, வத்திக்கானிலிருந்து தனது 31வது வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் தொடங்குகிறார். செப்டம்பர் 10ம் தேதி வரை திருத்தந்தை மேற்கொள்ளும், இந்த திருத்தூதுப்பயணத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மூன்று நாடுகளுக்குச் செல்கிறார்.

03 September 2019, 15:30