தேடுதல்

Vatican News
ப்ரெஞ்ச் முன்னாள் அரசுத்தலைவர் சிராக் மரணம் ப்ரெஞ்ச் முன்னாள் அரசுத்தலைவர் சிராக் மரணம்  (ANSA)

ப்ரெஞ்ச் முன்னாள் அரசுத்தலைவர் சிராக் இறப்பிற்கு அஞ்சலி

அரசுத்தலைவர் சிராக் அவர்களின் மரணத்தையொட்டி, திருமதி சிராக் மற்றும், அவரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துள்ள ப்ரெஞ்ச் ஆயர்கள், வருகிற திங்களன்று நடைபெறும் அடக்கச்சடங்கில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"ஆண்டவர் நமக்களிக்கும் அன்பு மற்றும், நம்பிக்கையை வாழவும், பகிர்ந்துகொள்ளவும், நமக்கு மற்றவர் தேவைப்படுகின்றனர்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், செப்டம்பர் 28, இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மெக்சிகோ கால்பந்து அணிக்கு வாழ்த்து

மேலும், "அமெரிக்க அணி" என்ற மெக்சிகோ நாட்டு கால்பந்து விளையாட்டு அமைப்பின் 103வது ஆண்டு நிறைவையொட்டி, அக்குழுவிற்கு, செப்டம்பர் 27, இவ்வெள்ளியன்று, காணொளிச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாடு, ஒருங்கிணைப்பு மற்றும், பொது நலனின் பாதைகளைப் பின்பற்றுவதற்கு, அந்நாட்டிற்காகச் செபிப்போம் என, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளுடன், விளையாட்டையும், சமுதாய ஒருங்கிணைப்பையும் இணைத்துச் செயல்படும், இந்த "அமெரிக்க அணிக்கு" தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, வருங்காலம், புகார்களோடு அல்ல, மாறாக, தீர்மானங்களோடு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அன்புக்குரிய மெக்சிகோ நாட்டின் எல்லா இடங்களிலும், எல்லாப் பிரிவுகளிலும் உள்ள  அனைத்து விளையாட்டு அணிகளுக்கும் தன் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொது நலன் மற்றும், ஒருங்கிணைப்பு வழிகளைத் தேடுகையில், மெக்சிகோ மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  

இந்த நிகழ்வில், மெக்சிகோ நகர் பேராயர், கர்தினால் Carlos Aguiar Retes அவர்கள், அமெரிக்க அணியின் அடையாளமான, அழிவின் ஆபத்திலுள்ள, தங்க கழுகைப் பாதுகாப்பது குறித்து திட்டத்தை ஆசீர்வதித்துள்ளார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியையும், பல்லுயிர்களையும் பாதுகாக்க வேண்டியதன் உடனடி தேவையையும், தனது காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அரசுத்தலைவர் சிரியாக் இறப்புக்கு செய்தி

இன்னும், பிரான்ஸ் நாட்டு முன்னாள் அரசுத்தலைவர் ஜாக் சிராக் அவர்கள் இறைபதம் சேர்ந்ததையொட்டி, அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும், தனது அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, அந்நாட்டு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.  

1995ம் ஆண்டு முதல், 2007ம் ஆண்டு வரை, பிரான்ஸ் நாட்டின் அரசுத்தலைவராகப் பணியாற்றிய, சிராக் அவர்கள், தனது 86வது வயதில் செப்டம்பர் 26, இவ்வியாழனன்று காலமானார்.

28 September 2019, 14:52