தேடுதல்

Vatican News
Nuovi Orizzonti குழுமத்தை ஆரம்பித்த, கியாரா அமிராந்தே Nuovi Orizzonti குழுமத்தை ஆரம்பித்த, கியாரா அமிராந்தே  

‘புதிய விடியல்கள்’ குழுமத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “புதிய விடியல்கள்” குழுமம் ஆற்றிவரும் நற்பணிகளை வியந்து, அந்தக் குழுமத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி பார்வையிட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி

மக்கள் பொருள்கள் அல்ல, மாறாக அவர்கள் மனிதர்கள், அவர்களின் மாண்பை மதிப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.

“ஆண்டவர் நம்மோடு நடந்துகொள்வதுபோல, நாமும் மக்களை, அவர்களின் பெயர்களால் அழைப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும், மற்றும், அவர்களை பொருள்களாகப் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், செப்டம்பர் 24, இச்செவ்வாயன்று இடம்பெற்றிருந்தன.

Nuovi Orizzonti குழுமம் சந்திப்பு

மேலும், Nuovi Orizzonti குழுமம், துவங்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, செப்டம்பர் 24, இச்செவ்வாயன்று அவ்வில்லத்தை, திடீரெனப் பார்வையிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகருக்கு தென்கிழக்கே ஏறத்தாழ 75 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Frosinone என்ற ஊரிலுள்ள Nuovi Orizzonti குழுமம், கியாரா அமிராந்தே என்பவரால் 1993ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

குழுமத்தின் பணி

உலகளாவிய குழுமமாக மாறியுள்ள, “புதிய விடியல்கள்” எனப்படும் இந்த Nuovi Orizzonti குழுமம், சமுதாயத்தில் பல்வேறு துன்பநிலைகளில் வாழ்வோர், குறிப்பாக, தெருச்சிறார் துன்பத்தில் வாழ்கின்ற இளையோர், போதைப்பொருள், மதுபானம் என, பல்வேறு செயல்களுக்கு அடிமைகளாக இருப்போர் போன்றவர்களுக்குப் பணியாற்றி வருகின்றது.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட மற்றும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கும், தங்கள் குடும்பங்களிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், இக்குழுமம் சேவைபுரிந்து வருகின்றது.

இக்குழுமத்தின் 200க்கும் அதிகமான பயிற்சி மையங்களில், ஏறத்தாழ முப்பதாயிரம் தன்னார்வலர்கள் வேலை செய்து வருகின்றனர்.

வானக நகரம் எனவும் அழைக்கப்படும் Nuovi Orizzonti குழுமம், துவங்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஜூன் மாதம் காணொளிச் செய்தி ஒன்றையும் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 September 2019, 14:31