தேடுதல்

Vatican News
பொது மறைக்கல்வி 180919 பொது மறைக்கல்வி 180919  (Vatican Media)

திருத்தந்தை - 21 காப்டிக் மறைசாட்சிகளை நினைவுகூர்ந்தார்

லிபியக் கடற்கரையில் 21 காப்டிக் மறைசாட்சிகள் கொல்லப்படுவதற்குமுன், அவர்கள் வாயிலிருந்து வெளிவந்த இறுதிச் சொல், இயேசு – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இப்புதன் பொது மறைக்கல்வியுரையை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#GeneralAudience) குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“ஒவ்வொரு மனித திட்டமும், முதலில் அங்கீகரிக்கப்படுகின்றது. பின்னர், அது உடைபடுகின்றது. ஆனால், விண்ணிலிருந்து மற்றும், கடவுளின் கையெழுத்தைத் தாங்கி வருகின்ற அனைத்தும் இறுதிவரை நிலைத்து நிற்கிறது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், நான்கு ஆண்டுகளுக்குமுன், லிபியக் கடற்கரையில் தலைவெட்டப்பட்டு மறைசாட்சிய மரணத்தைத் தழுவிய எகிப்து நாட்டு 21 காப்டிக் கிறிஸ்தவர்களை, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் நினைவுகூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐ.எஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தலைவெட்டப்பட்டு இறந்த, இந்த காப்டிக் மறைசாட்சிகள் அனைவரும், இறுதிவரை கிறிஸ்தவ விசுவாசத்தைக் கைவிடவில்லை, தூய ஆவியார் அவர்களோடு இருந்தார், இயேசு என்பதே, அவர்கள் வாயிலிருந்து வெளிவந்த இறுதிச் சொல் என்றும் திருத்தந்தை கூறினார்.

மறைசாட்சிகள் ஒருபோதும் பின்வாங்குவதே இல்லை, திருத்தூதர்கள், தங்களை ஒருபோதும் ஒருமைப்படுத்திப் பேசியதில்லை, நாங்கள் என்றே பேசினர் என்றுரைத்த திருத்தந்தை, போலந்து நாட்டில் இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா பற்றியும் குறிப்பிட்டார்.

சிறார் மற்றும், இளையோர்க்குப் பாதுகாவலரான இப்புனிதர், இளைஞராக இருந்தபோது, இயேசு சபையில் சேர்வதற்காக, வியன்னா நகரிலிருந்து உரோம் நகர் வரை நடந்தே வந்தார் என்றும், இவ்வாறு, இறையழைப்புக் குரலைப் பின்செல்வதற்கு எத்தகைய தியாகம் தேவைப்படுகின்றது என்பதை இப்புனிதர் வெளிப்படுத்தினார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் பங்குகொண்ட போலந்து நாட்டுத் திருப்பயணிகளிடம் புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவின் குரலைப் பின்தொடர்வதற்கு அஞ்ச வேண்டாம் என்று, இளையோரைக் கேட்டுக்கொண்டார்.  

லிபியா சர்வாதிகாரி முகமது கடாஃபி அவர்களின் சொந்த ஊரான Sirteல், கடத்தப்பட்டு 2015ம் ஆண்டின் ஆரம்ப காலத்தில், 21 காப்டிக் கிறிஸ்தவர்கள் தலைவெட்டப்பட்டு மறைசாட்சிய மரணத்தைத் தழுவினர்.

18 September 2019, 16:21