தேடுதல்

Vatican News
மொசாம்பிக் நாட்டிற்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் மொசாம்பிக் நாட்டிற்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

திருத்தந்தை - ஆப்ரிக்காவில் ஒப்புரவு நிலவ செபியுங்கள்

உரோம், அஸ்தாலி புலம்பெயர்ந்தோர் மையம் மற்றும், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பிலிருந்து, ஏறக்குறைய 12 பேரை, இப்புதன் காலையில், சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீஷியஸ் ஆகிய மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு, திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கியுள்ள இவ்வேளையில், ஆப்ரிக்காவில் நிலையான அமைதி ஏற்பட இன்றியமையாததாகிய ஒப்புரவு நிலவ செபியுங்கள் என்று, இப்புதன் காலையில் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருத்தூதுப்பயணத்தையொட்டி, செப்டம்பர் 4 இப்புதன் காலையில், ஹாஸ்டாக்குடன் (#ApostolicJourney #Mozambique #Madagascar #Mauritius), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவுசெய்துள்ள டுவிட்டர் செய்தியில், “ஆப்ரிக்காவில், உடன்பிறப்பு உணர்வுடன்கூடிய ஒப்புரவு நிலவ செபியுங்கள், ஏனெனில், இத்தகைய ஒப்புரவே, உறுதியான மற்றும் நிலைத்த அமைதிக்கு ஒரே நம்பிக்கை” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

31வது திருத்தூதுப்பயணம்

இப்புதன் உரோம் நேரம் காலை 8 மணி 5 நிமிடங்களுக்கு, A330 ஆல் இத்தாலியா விமானத்தில், உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மொசாம்பிக் நாட்டிற்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் தலைநகர், மப்புத்தோவைச் சென்றடையும்போது உள்ளூர் நேரம் மாலை 6.30 மணியாக இருக்கும்.

மப்புத்தோ விமான நிலையத்தில், மொசாம்பிக் அரசுத்தலைவர் Filipe Nyusi அவர்கள் திருத்தந்தையை வரவேற்கும் நிகழ்வு நடைபெறும். அரசுத்தலைவர் Nyusi அவர்கள், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி, முன்னாள் புரட்சிக் குழுவும், தற்போதைய எதிர்க்கட்சியுமான ரெனாமோ அமைப்போடு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் 15ம் தேதி, அந்நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதனன்று, மப்புத்தோ விமான நிலையத்திலிருந்து திருப்பீட தூதரகம் சென்று உறங்கச் செல்லும் திருத்தந்தையின் செப்டம்பர் 05, இவ்வியாழன் நிகழ்வுகளில், மரியாதை காரணமாக அரசுத்தலைவரைச் சந்தித்தல், அரசு, தூதரக, மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கு உரையாற்றுதல், இளையோருடன் பல்சமய செப நிகழ்வில் கலந்துகொள்ளல், ஆயர்கள் அருள்பணியாளர்கள் பிரதிநிதிகளைச் சந்தித்தல், இருபால் துறவியர், வேதியர்கள் மற்றும், பங்குத்தள பொதுநிலை தலைவர்களைச் சந்தித்தல் போன்றவை திட்டமிடப்பட்டுள்ளன. 

இப்பயணத்தில், தெருச்சிறார் மற்றும் இளையோரைப் பராமரிக்கும், "மத்தேயு 25" என்ற இல்லத்தையும் திருத்தந்தை பார்வையிடுவார்.

மப்புத்தோவில் செப்டம்பர் 6, வருகிற வெள்ளி நண்பகலில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, அங்கிருந்து மடகாஸ்கர் தலைநகர் Antananarivo செல்வார் திருத்தந்தை. அந்நகரில் பயணத் திட்டங்களை நிறைவேற்றி, செப்டம்பர் 9 வருகிற திங்களன்று மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸ் செல்வார்.

அந்நகரிலும், நிகழ்வுகளை நிறைவு செய்து, மீண்டும் Antananarivo நகர் வந்து, செப்டம்பர் 10ம் தேதி காலையில் உரோம் நகருக்குப் புறப்பட்டு, அன்று மாலை 7 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய அரசுத்தலைவருக்கு செய்தி

இப்புதன் காலையில் மொசாம்பிக் நாட்டிற்குப் புறப்படுவதற்குமுன், இத்தாலிய அரசுத்தலைவர் ஜெர்ஜோ மத்தரெல்லா அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு, திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கும் இவ்வேளையில் இத்தாலிய மக்களுக்காகச் செபிக்கின்றேன் என்று அதில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தும் அஸ்தாலி புலம்பெயர்ந்தோர் மையம் மற்றும், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பிலிருந்து, கர்தினால் Konrad Krajewski அவர்கள் அழைத்து வந்திருந்த ஏறக்குறைய 12 பேரை, இப்புதன் காலை 7 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

04 September 2019, 15:34