தேடுதல்

Vatican News
சிறைகளில் பணியாற்றுவோர், கைதிகள் சந்திப்பு சிறைகளில் பணியாற்றுவோர், கைதிகள் சந்திப்பு   (Vatican Media)

சிறைகளில் பணியாற்றுவோர், கைதிகளுக்கு திருத்தந்தை உரை

கைதிகளே, நீங்கள் கடவுளின் கண்களுக்கு விலையேறப்பெற்றவர்கள், உங்களுக்கு, நம்பிக்கை நிறைந்த ஒரு வருங்காலம் உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா– வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் சிறைகளில் பணியாற்றும் காவல்துறையினர், சிறை நிர்வாகிகள், ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் தன்னார்வலர்கள் மற்றும், கைதிகள் என, ஏறத்தாழ 11 ஆயிரம் பேரை, செப்டம்பர் 14, இச்சனிக்கிழமை பகல் 11.30 மணியளவில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பில், முதலில் சாட்சியங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறைத்துறை நிர்வாகத் தலைவர் திருத்தந்தைக்கு வாழ்த்துரையாற்றினார். பின்னர், திருத்தந்தைக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

சிறைக் காவலர்கள், அதிகாரிகளுக்கு

இந்நிகழ்வில், முதலில், சிறைகளில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும், அலுவலகர்களிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதாக உரைத்த திருத்தந்தை, உங்களின் பணி, மறைவான, அதேநேரம், கடினமான மற்றும், திருப்தியற்றதாய் இருந்தாலும், அது இன்றியமையாதது என்று கூறினார்.

உங்களின் பணி எளிதானதல்ல, ஆயினும், விழிப்புடன் இருக்கவேண்டிய இப்பணி, பலவீனர்களுக்கு ஆதரவாக ஆற்றப்படுகின்றது, அவர்களின் எதிர்காலத்தை அமைப்பவர்களாக மாறுகின்றீர்கள் என்றுரைத்த திருத்தந்தை, சிறைப்பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டிருப்பதாக எண்ணி, அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள் (எபி.13,3). என்ற புதிய ஏற்பாட்டு சொற்களையும் நினைவுபடுத்தினார்.

மனிதரின் மாண்பை மதிப்பதை விட்டுவிடாமல் கைதிகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணித்துள்ளீர்கள், இந்த உங்களது கடினமான பணியில் ஆதரவாக இருக்கும் உங்கள் குடும்பத்தினரையும் மறவாதீர்கள் என்றுரைத்த திருத்தந்தை, கொள்ளளவுக்குமேல் கைதிகள் உள்ள சிறைகளையும் நினைத்துப் பார்க்கிறேன், கைதிகளுக்குத் தரமான வாழ்வுச் சூழல்கள் உறுதிசெய்யப்பட வேண்டியது இன்றியமையாதது என்றும் கூறினார். 

சிறையில் ஆன்மீகப் பணியாற்றுவோர்க்கு

இரண்டாவதாக, சிறைகளில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மற்றும், தன்னார்வலர்களுக்கென கூறிய செய்தியில், சிறைகளின் சுவர்களுக்குள் நற்செய்தியை எடுத்துச்செல்லும் நீங்கள், புன்னகை மற்றும், செவிமடுக்கும் இதயத்தின் சக்தியினால் மிக கடினமான சூழல்களில் நுழைகிறீர்கள், பிறரின் சுமைகளை உங்கள் மீது ஏற்றி, அவர்களுக்காகச் செபிக்கின்றீர்கள் என்றார் திருத்தந்தை.

வறியவர்களைச் சந்திக்கும்போது, ஒருவர் தனது வறிய நிலையைப் பார்க்கிறார், தனிமையை உணர்பவர்களைக் கைவிட்டுவிடாதீர்கள், அனைவருக்கும் மன்னிப்பு தேவை என்பதை உணரச் செய்யுங்கள், நீங்கள் கைதிகளுக்கு ஆறுதலளித்து, கடவுளின் மன்னிப்பின் நம்பத்தகுந்த சான்றுகளாக மாறுகிறார்கள் என்று ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

கைதிகளுக்கு திருத்தந்தை

மூன்றாவதாக, கைதிகளுக்கென கூறிய செய்தியில், நம்பிக்கையிழந்த இருள் எனும் சிறைக்குள் உங்களை ஒருபோதும் கைதிகளாக்கிவிடாதீர்கள், எந்தப் பிரச்சனையையும்விட கடவுள் மேலானவர், நீங்கள் அவரை அன்புகூர வேண்டுமென காத்திருக்கிறார், சிலுவையில் அறையப்பட்டு இயேசுவின்முன் உங்களை நிறுத்தி அவரை உற்றுநோக்குங்கள், அவ்விடத்திலிருந்தே அமைதி மீண்டும் உங்களில் பிறக்கும் என்றார் திருத்தந்தை.

உங்கள் கண்களைப் பார்க்கையில், ஏமாற்றத்தையும் விரக்தியையுமே பார்க்கிறேன், ஆயினும், உங்கள் உறவுகளின் நினைவில், உங்கள் இதயத்தில் நம்பிக்கை இன்னும் துடித்துக்கொண்டிருக்கின்றது, நம்பிக்கை தீபத்தை ஒருபோதும் துன்புறவிடாதீர்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு சகோதரர், சகோதரிகளே, இந்த தீபத்தை உயிர்பெறச்செய்வது அனைவரின் கடமை என்றும் கூறினார்.

கைதிகளே, நீங்கள் கடவுளின் கண்களுக்கு விலையேறப்பெற்றவர்கள், உங்களுக்கு, நம்பிக்கை நிறைந்த ஓர் எதிர்காலம் உள்ளது, நீங்கள் கடவுளின் இதயத்தில் இருக்கின்றார்கள், துணிச்சலுடன் இருங்கள் என்று ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

14 September 2019, 15:04