தேடுதல்

Vatican News
ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

உரையாடல், ஒப்புரவை ஊக்குவிப்பதில் முன்னணியில் நில்லுங்கள்

கீழைவழிபாட்டுமுறை ஆயர்களிடம் திருத்தந்தை - நம் அயலவரை எவ்வாறு அன்புகூர்ந்தோம், நம் வாழ்வுப் பாதையில் சந்திப்பவர்களுக்கு எவ்வாறு மீட்பின் நற்செய்தியை அறிவித்தோம் என்பது பற்றியே, இறுதி நாளில் ஆண்டவர் நம்மிடம் கேட்பார்

மேரி தெரேசா– வத்திக்கான் செய்திகள்

ஏராளமான சமத்துவமின்மைகளும், பிரிவினைகளும் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற இக்காலத்தில், உரையாடலையும், ஒப்புரவையும் ஊக்குவிப்பதில் முன்னணியில் நிற்பவர்களாகவும், சந்திப்புப் பண்பாட்டை பொறுமையுடன் கட்டியெழுப்புவர்களாகவும் செயல்படுமாறு, ஐரோப்பாவில் இறைப்பணியாற்றும் ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பாவில் இறைப்பணியாற்றும், கீழைவழிபாட்டுமுறையின் நாற்பது ஆயர்களை,  செப்டம்பர் 14, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தோட்டம் உட்பட பல்வேறு இடங்களில், பல்வேறு நிலையிலுள்ள தலைவர்களுடன், புனித பூமியில் அமைதி நிலவச் செபித்தது பற்றியும் குறிப்பிட்டார்.

கீழைவழிபாட்டுமுறை திருஅவையின் மரபுகளை முழுமையாகக் கடைப்பிடித்துவரும் ஆயர்கள், இறையியல் கல்லூரிகளில், கல்வி மற்றும், கலாச்சாரப் பரிமாற்றங்களில் இளம் அருள்பணியாளர்களை ஈடுபடுத்துமாறும் கூறினார், திருத்தந்தை.

தனிமை, ஏழ்மை, கருவில் வளரும் குழந்தைகள், நம்பிக்கையிழந்த இளையோர், பிரிந்துசெல்ல சோதிக்கப்படும் குடும்பங்கள், புறக்கணிக்கப்படும் நோயாளர் அல்லது முதியோர் ஆகியோருக்கு அன்புப் பணியாற்றி, பிரிவினை நோய்களைக் குணப்படுத்துமாறு திருத்தந்தை வலியுறுத்தினார்.

நாம் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அழைத்த ஆண்டவர், நம் ஆளுகையில், எத்தனை அல்லது, எந்தப் பகுதிகளில் பணியாற்றினோம், தேசிய தனித்துவங்களின் வளர்ச்சிக்கு எவ்வளவு உதவினோம் போன்றவை பற்றிக் கேட்கமாட்டார், மாறாக, நம் அயலவரை எவ்வாறு அன்புகூர்ந்தோம், நம் வாழ்வுப் பாதையில் சந்திப்பவர்களுக்கு எவ்வாறு மீட்பின் நற்செய்தியை அறிவித்தோம் என்பது பற்றியே கேட்பார் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புகூர்வதிலே, மகிழ்வு கண்டுணரப்படுகிறது, நம்பிக்கை பரப்படுகிறது, கடவுளையும், அடுத்தவரையும் அன்புகூர்வதிலே அனைத்தும் அடங்கியுள்ளன, அன்பு பிரிவினைகளைக் குணப்படுத்தும், ஒன்றிப்பு உணர்வில், துணிச்சலுடன் முன்னோக்கி நடப்போம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பணத்தில் பற்றுக்கொள்ளாதீர்கள், அதில் பற்றுக்கொண்டால், நம் பைகளில் சாத்தான் நுழைந்துவிடும் என்பதை மறவாதீர்கள் என்றும், ஐரோப்பாவில் இறைப்பணியாற்றும், கீழைவழிபாட்டுமுறை ஆயர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

14 September 2019, 15:11