தேடுதல்

Vatican News
மொரீஷியசில் திருத்தந்தை பிரான்சிஸ் மொரீஷியசில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

31வது திருத்தூதுப் பயண நிறைவு, அன்னை மரியாவுக்கு நன்றி

மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், மக்களின் விசுவாசத்தை மேலும் ஆழப்படுத்தியது

மேரி தெரேசா – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளில், தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து,  செப்டம்பர் 10, இச்செவ்வாய் இரவில் வத்திக்கான் வந்தடைந்தார்.

ஆப்ரிக்க கண்டத்திற்கு நான்காவது முறையாகச் சென்று திரும்பியுள்ள திருத்தந்தை, இந்த மூன்று இந்தியப் பெருங்கடல் பகுதி ஆப்ரிக்க நாடுகளில், தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்கு, அன்னை மரியாவிற்கு நன்றியும் செலுத்தினார்.

உரோம் சம்ப்பினோ விமான நிலையத்திலிருந்து வத்திக்கானுக்குக் காரில் திரும்பியபோது, மேரி மேஜர் அன்னை மரியா பசிலிக்காவிற்குச் சென்று, Maria Salus Populi Romani எனப்படும், உரோம் மக்களுக்குச் சுகமளிக்கும் அன்னை மரியாவின் பீடத்தடியில் மலர்களை அர்ப்பணித்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்துடன், கடந்த ஆறு நாள்களாக, மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளில், திருத்தந்தை மேற்கொண்ட 31வது திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது.

திருஅவையின் மறையுண்மை பற்றிய சிந்தனைகள்

மேலும், திருத்தந்தையின், இந்த 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தையொட்டி, புனித பேதுருவின் வழிவருபவர் நிகழ்வுகளில் கலந்துகொண்ட திருஅவையின் மறையுண்மை பற்றிய சிந்தனைகளை, திருப்பீட சமூகத்தொடர்பு துறைத் தலைவர் பவுலோ ரூஃபினி (Paolo Ruffini) அவர்கள் வெளியிட்டுள்ளார்,

மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட பயணம், திருத்தந்தையரின் மற்ற பயணங்களின் முக்கியத்துவத்தை எவ்விதத்திலும் குறைத்துவிடாமல், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியது என்று ரூஃபினி அவர்கள் கூறியுள்ளார்.

சாலையோரங்களில் பெரும் திரளாக, மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடிநின்றது, ஒன்றிப்பில், தங்களின் விசுவாசத்தை மகிழ்வோடு வெளிப்படுத்தினர் மற்றும், அது, புனித பேதுருவின் வழிவருபவரால் பலப்படுத்தப்பட்டது என்று, ரூஃபினி அவர்கள் கூறியுள்ளார்.

11 September 2019, 16:10