தேடுதல்

‘மத்தேயு 25’ பிறரன்பு இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ‘மத்தேயு 25’ பிறரன்பு இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

‘மத்தேயு 25’ பிறரன்பு இல்லம்

‘மத்தேயு 25’ பிறரன்பு இல்லத்தில், தெருச்சிறார், வீடற்றவர், சமுதாயத்தின் விளிம்புநிலையில் வாழ்வோர், போதைப்பொருளுக்கும், மதுபானங்களுக்கும் அடிமையானோர், நோயாளர், முன்னாள் குற்றவாளிகள் போன்ற ஏழ்மை நிலையில் வாழ்வோர்க்கு உணவளிக்கப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்  - வத்திக்கான்

மப்புத்தோ அமலமரி பேராயலயத்தில் சந்திப்பை நிறைவு செய்து, அங்கிருந்து 2.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ‘மத்தேயு 25’ எனப்படும் பிறரன்பு இல்லத்திற்கு காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த இல்லத்தை, தலத்திருஅவை மற்றும், ஏறத்தாழ இருபது துறவு சபைகளின் ஒத்துழைப்போடு மொசாம்பிக் திருப்பீட தூதரகம் நடத்தி வருகின்றது. இங்கு ஒவ்வொரு நாளும், 70 முதல், 120 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. தன்னார்வலர் அமைப்புகளும் உதவிசெய்யும் இந்த இல்லம், தெருச் சிறார், வீடற்றவர், சமுதாயத்தின் விளிம்புநிலையில் வாழ்வோர், போதைப்பொருளுக்கும், மதுபானங்களுக்கும் அடிமையானோர், நோயாளர், முன்னாள் குற்றவாளிகள் போன்ற ஏழ்மை நிலையில் வாழ்வோர்க்கு உதவிசெய்து வருகின்றது. இவ்வில்லத்திற்குச் சென்ற திருத்தந்தையை, மொசாம்பிக் அரசுத்தலைவர் Filipe Jacinto Nyusi அவர்கள் வரவேற்றார். இவ்வில்லத்தைப் பார்வையிட்ட திருத்தந்தை, மரியாவின் மாசற்ற திருஇதய அழகான படம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். இப்படம், 1953ம் ஆண்டிலிருந்து, இத்தாலியின் சிசிலித் தீவிலுள்ள சிராகுஸ் நகரில் வணங்கபட்டுவரும், கண்ணீரின் அற்புத அன்னை மரியா படத்தின் நகலாகும். இங்கிருந்து, மப்புத்தோ திருப்பீட தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன், மப்புத்தோ நகரில், முதல் நாள் பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2019, 16:29