தேடுதல்

Vatican News
அருள்பணி டேவிட் தெ ஒலிவெய்ரா மார்ட்டின்ஸ்"  அமைப்பினர் சந்திப்பு அருள்பணி டேவிட் தெ ஒலிவெய்ரா மார்ட்டின்ஸ்" அமைப்பினர் சந்திப்பு  (Vatican Media)

கனிவுப் புரட்சியில் பங்குகொள்ள அஞ்ச வேண்டாம்

உங்களில் எவரும் தனிமையாய் இருப்பதாக உணராதீர்கள், கடவுள் தம் இரக்கத்தைத் தாங்கிச் செல்பவர்களாக உங்களை ஆக்குவாராக, கிறிஸ்துவின் சாயலாகிய உங்கள் அயலவருக்கு நெருக்கமாக இருங்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடந்த காலம், உங்களின் வாழ்வை ஒருபோதும் தீர்மானிப்பதற்கு அனுமதிக்காதீர்கள் என்றும், எப்போதும் முன்னோக்கிச் செல்லுங்கள் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்த்துக்கல் நாட்டு சமுதாயநல அமைப்பு ஒன்றிடம் கூறினார்.

Braga நகரில் இயங்கும், “அருள்பணி டேவிட் தெ ஒலிவெய்ரா மார்ட்டின்ஸ்" சமுதாயநல மையத்தின் அறுபது உறுப்பினர்களை, செப்டம்பர் 28, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து, தன் நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

ஏழைச் சிறார், இளையோர் மற்றும், வயது முதிர்ந்தோர்க்கு உதவுகின்ற இந்த அமைப்பினரின் பயணம், வருங்காலத்தை ஒன்றிணைந்து நோக்கியதாக உள்ளது என்றும், நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே, ஆயினும், நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள், கிறிஸ்து கடவுளுக்குரியவர் என, புனித பவுலடிகளார் போதித்திருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள் என்பதே, உங்கள் வரலாற்றின் ஆழமான அர்த்தமாகும் என்று உரையாற்றிய திருத்தந்தை, உங்கள் சகோதரர், சகோதரிகளைப் பராமரிப்பதில், எப்போதும் செபத்தில் கிறிஸ்துவோடு நிலைத்திருங்கள் என்று கூறினார்.

உங்களில் எவரும் தனிமையாய் இருப்பதாக உணராதீர்கள், கடவுள் தம் இரக்கத்தைத் தாங்கிச் செல்பவர்களாக உங்களை ஆக்குவாராக, கிறிஸ்துவின் சாயலாகிய உங்கள் அயலவருக்கு நெருக்கமாக இருங்கள் என்று, போர்த்துக்கீசிய சமுதாயநல மையத்தினரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

28 September 2019, 14:48