தேடுதல்

Vatican News
இத்தாலியின் அல்பானோ நகரில்  திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் அல்பானோ நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் 

நாம் மற்றவரின் வாழ்வை மேற்பார்வையிடுபவர்கள் அல்ல

அல்பானோவில் திருத்தந்தை: அனைத்து ஆலயங்கள் போன்று, உங்களது பேராலயத்தையும், ஆண்டவரால் நினைவுகூரப்படும் இடமாக, எல்லாரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் வானொலி

நம் ஆண்டவர் நம்மை நினைத்துக்கொண்டிருக்கின்றார், அவர் நம்மை மறப்பதில்லை, அவரிடமிருந்து நம்மைத் தொலைவில் வைக்கும் தடைகள் இருந்தபோதிலும், அவர் நம்மைவிட்டுப் பிரிவதில்லை என்று, அல்பானோ நகர் மக்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 21, இச்சனிக்கிழமை மாலையில், இத்தாலியின் அல்பானோ நகர் சென்று, திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எரிக்கோவில்  வரிதண்டுவோருக்குத் தலைவரான சக்கேயு பற்றிக்கூறும் நற்செய்தியை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

இயேசுவை நாம் அன்புகூர்வதற்குமுன், அவரது அன்பு எப்போதும் முந்திக்கொள்கிறது மற்றும், அந்த அன்பு நம் வாழ்வை மாற்றுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, ஆலயம், கடவுளின் இரக்கத்தின் வீடு என்று கூறினார்.

வரிதண்டும் சக்கேயு

இயேசு அவ்வழியாகச் செல்வதை அறிந்த சக்கேயு, தான் குட்டையாய் இருந்ததால், கூட்டம் வருமுன்னரே காட்டு அத்தி மரத்தில் ஏறி, ஆண்டவரைப் பார்க்க முயற்சித்தார், இயேசு அவ்விடத்திற்கு வந்தபோது, அவர் அவரை கீழே இறங்கிவரச் செய்து, அவரது வீட்டில் உணவருந்த வேண்டும் என்ற ஆவலைத் தெரிவித்தார். இது சக்கேயுவுக்கு பெருமகிழ்வை அளித்தது. ஆனால் கூட்டத்தினர் சகேகேயுவை பாவி எனப் புகார் சொன்னார்கள். எனினும், செல்வரான அந்த மனிதர், தனது உடைமைகளில் பாதியை ஏழைகளுக்கு அளித்தார், இயேசு வழியாக அவர் மீட்படைந்தார்.

தடைகள்

குட்டையாய் இருந்த சக்கேயு, உடலளவில் மற்றும், நன்னெறியில் பல தடைகளை எதிர்கொண்டார் என விளக்கிய திருத்தந்தை, குட்டையாயிருந்ததால் வெட்கப்பட்டு, இயேசுவிடமிருந்து தன்னை மறைக்கவும், அதேவேளை அவரைப் பார்க்கவும் மரத்தில் ஏறிய சக்கேயு, அன்புகூரப்படவும் மீட்கப்படவும் தேவையிலுள்ள மனிதர் என்ற முக்கியமான கூறை மறக்கவில்லை என்று கூறினார். 

கடவுள் உங்களை அன்புகூர்கிறார் என்பதை நினைவுபடுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆலயமும், ஒவ்வொரு மனிதரின் இதயத்தில் உயிர்த்துடிப்புடன் வாழ்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இயேசு செய்ததைப்போல, உங்கள் நகரைக் கடந்துசெல்ல அஞ்ச வேண்டாம், மறக்கப்பட்டவர்கள், வெட்கம், பயம், தனிமை, போன்ற கிளைகளின் பின்னால் மறைந்திருப்பவர்கள் போன்றோரிடம் சென்று, கடவுள் உங்களை நினைத்துக்கொண்டிருக்கின்றார் என்று கூறினார்.

இயேசுவைப் பார்க்க மட்டுமல்ல, அவர் யார் என அறிய சக்கேயு ஆவல்கொண்டார், ஆனால் இயேசு முந்திக்கொண்டு, முதலில் சக்கேயுவை நெருங்கி அவரிடம் பேசினார், எனவே இயேசு, நம்மை முதலில் பார்க்கிறார், அன்புகூர்கிறார், வரவேற்கிறார் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சக்கேயு வீட்டில்

இதை நாம் உணரும்போது, வாழ்வு மாற்றம் அடைகின்றது என்றும், எந்த நகரில் விரும்பப்படாதவராக இருந்தாரோ அதே நகரில் சக்கேயுவை விரும்பப்பட்டவராக இயேசு உணரச் செய்தார், சக்கேயுவும் அன்புகூரப்பட்டவராக வீடு திரும்பினார், அன்புகூரப்பட்டு, அவர் தன் அயலவருக்கு கதவைத் திறந்தார் என்று விளக்கினார் திருத்தந்தை.

நம் அயலவரும், நம்மோடு தொடர்புள்ளவர்களும், ஆலயத்தை தன் இல்லமாக உணர்வது எவ்வளவு அழகானது என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவர், தனது இல்லமாகிய ஆலயம், அனைவருக்கும் இல்லங்கள் மத்தியில் இல்லமாக அமைய விரும்புகிறார் என்று கூறினார்.

நாம் மற்றவரின் வாழ்வை மேற்பார்வையிடுபவர்களாக இல்லாமல், அனைவருக்கும் நன்மையை ஊக்குவிப்பவர்களாக இருப்போம் என்றுரைத்த திருத்தந்தை, அனைத்து ஆலயங்கள் போன்று, உங்களது பேராலயத்தையும், ஆண்டவரால் நினைவுகூரப்படும் இடமாக ஒவ்வொருவரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன் என்று, அல்பானோ மக்களிடம் கூறினார்.

1865ம் ஆண்டு செப்டம்பரில், திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், அல்பானோ பேராலயத்தை, மைனர் பசிலிக்காவாக உயர்த்தியதன் 159ம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பேராலயத்திற்குச் சென்றார்.

23 September 2019, 16:00