தேடுதல்

Vatican News
புற்றுநோய் மருத்துவத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இத்தாலிய குழுவுடன் திருத்தந்தை புற்றுநோய் மருத்துவத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இத்தாலிய குழுவுடன் திருத்தந்தை  (Vatican Media)

நோய், மற்றும், நோயாளி மீது காட்டப்படும் அக்கறை

ஒருவரையொருவர் எதிர்த்துக் கொண்டு வாழும் இன்றைய உலகில், பொதுநலனைக் கட்டியெழுப்பும் அர்ப்பணத்துடன் செயல்படும் இத்தாலிய புற்றுநோய் மருத்துவ ஆய்வு குழு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்களின் நலவாழ்வில் அதிக அக்கறை கொண்டு, புற்றுநோய் மருத்துவத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இத்தாலிய குழுவைப் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புற்றுநோய் மருத்துவம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இத்தாலியக் குழுவை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1973ம் ஆண்டு முதல் புற்றுநோயியல் துறையில் ஆய்வுகளையும், தடுப்பு முறைகளையும், பயிற்சி வகுப்புக்களையும் தீவிர சிகிச்சைகளையும் மேற்கொண்டுவரும் இவ்வமைப்பிற்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

எவ்வித இலாப நோக்கமுமின்றி, புற்றுநோயியல் துறையில், இவ்வமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர்கள், ஒருவரையொருவர் எதிர்த்துக் கொண்டு வாழும் இன்றைய உலகில், பொதுநலனைக் கட்டியெழுப்பும் அர்ப்பணத்துடன் செயல்பட வேண்டியதை இவ்வமைப்பின் நடவடிக்கைகள் கற்பிக்கின்றன என்று கூறினார்.

புற்று நோயியல் குறித்த இந்த இத்தாலிய அமைப்பின் செயல்பாடுகள், நோய் குறித்த ஆய்வுகளை மட்டுமல்ல, ஒவ்வொரு நோயாளி மீதான தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்துவதாக உள்ளன என்பதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  சகோதரத்துவ உணர்வுடன் கூடிய ஆதரவு ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை, இவ்வமைப்பின் நடவடிக்கை, முழு சமூகத்திற்கும் கற்றுத்தருகிறது எனவும் பாராட்டினார்.

மக்களுக்கு சேவை புரிவதை நோக்கமாகக் கொண்டு ஆற்றப்படும் புற்றுநோயியல் ஆய்வுகளும், குணமளிக்கும் பணிகளும், இரக்கத்தின் செயல்பாடுகளாக உள்ளன என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதனை ஒரு பொருளாகவோ, சுமையாகவோ நடத்தும்போது ஏற்படும் தீய விளைவுகள் குறித்து, தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில், கருணைக் கொலை குறித்த அனுமதிகள் பலநாடுகளில் வழங்கப்பட்டு வருவது, தனக்கு வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.

02 September 2019, 16:04