தேடுதல்

Vatican News
தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளின் இலச்சினை தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளின் இலச்சினை 

நவம்பரில் ஜப்பான், தாய்லாந்தில் திருத்தந்தை

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1981ம் ஆண்டில் ஜப்பானிலும், 1984ம் ஆண்டில் தாய்லாந்திலும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். 2019ம் ஆண்டு நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாடுகளுக்குச் செல்லவுள்ளார்

மேரி தெரேசா– வத்திக்கான்

வருகிற நவம்பர் 19ம் தேதி முதல், 26ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

தாய்லாந்து அரசு மற்றும் ஆயர்களின் அழைப்பின்பேரில், அந்நாட்டில், நவம்பர் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், ஜப்பான் அரசு மற்றும் ஆயர்களின் அழைப்பின்பேரில், அந்நாட்டில், 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை, டோக்கியோ, நாகசாகி மற்றும், ஹிரோஷிமா நகரங்களிலும், திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார்.

இப்பயணங்கள் பற்றிய மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என, திருப்பீட தகவல் தொடர்பகம் தெரிவித்துள்ளது.  

தாய்லாந்து

“கிறிஸ்துவின் சீடர்கள், மறைப்பணி சீடர்கள்” என்ற விருதுவாக்குடன் தாய்லாந்தில் திருத்தந்தை மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணம், அந்நாட்டின் சியாம் நகரில், 1669ம் ஆண்டில், அப்போஸ்தலிக்க தலைமையகம் உருவாக்கப்பட்டதன் 350ம் ஆண்டை நிறைவை முன்னிட்டு நடைபெறுகின்றது.

இலச்சினை

இத்திருத்தூதுப் பயணத்திற்கென வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில், புன்னகையுடன் விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புகைப்படம், அப்படத்திற்குக்கீழ் நற்செய்தி அறிவிப்பைக் குறிக்கும் படகு உள்ளது. அதிலுள்ள மூன்று கப்பல் பாய்கள் மூவொரு கடவுளைக் குறிப்பதாகும். அந்தப் படகை, அன்னை மரியா தனது கரத்தால் தாங்குவது போன்று அழகாக, நவீனமுறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கரத்திலுள்ள தங்கநிறச் சிலுவையும் விவிலியமும், தாய்லாந்து கத்தோலிக்கத் திருஅவை முழுவதையும் நற்செய்திக்குச் சான்று பகர அழைப்பதாக அமைந்துள்ளது.

ஜப்பான்

ஜப்பானில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “அனைத்து வாழ்வையும் காப்பாற்று” என்ற விருதுவாக்கு, Laudato Si’ அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருத்தந்தையின் திருமடலின் இறுதியிலுள்ள, நம் பூமிக்காகச் செபம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

இலச்சினை

ஜப்பான் திருத்தூதுப் பயணத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலச்சினையில், சிவப்பு நிறத்திலுள்ள வட்டவடிவம், ஜப்பானில் திருஅவைக்கு அடித்தளமிட்டவர்கள் மறைசாட்சிகள் என்பதையும், அதில் நீல நிறத்திலுள்ள சுடர்விடும் தீபம், அன்னை மரியா, அனைத்து மனித சமுதாயத்தையும், தம் பிள்ளைகளாக அரவணைக்கின்றார் என்பதையும், பச்சை நிற சுடர், இயற்கை வளத்தால் நிறைந்துள்ள ஜப்பான், நம்பிக்கையுடன் நற்செய்தியை அறிவிக்கின்றது என்பதையும் குறிக்கின்றன. அதற்குக் கீழே, இப்பயணத்தின் விருதுவாக்கு எழுதப்பட்டுள்ளது.

38 ஆண்டுகளுக்குமுன் ஜப்பானிலும், 35 ஆண்டுகளுக்குமுன் தாய்லாந்திலும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். அதற்குப்பின், தற்போது அந்நாடுகளுக்கு செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

13 September 2019, 15:29