தேடுதல்

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில்  திருத்தந்தை புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் திருத்தந்தை 

நவம்பர் 9ல் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் திருப்பலி

உலகிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம் அன்னை ஆலயமாக, காலங்காலமாகக் கருதப்பட்டுவரும் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவை, உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன் அவர்கள் கட்டி எழுப்பினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா நேர்ந்தளிப்பு விழாவான நவம்பர் 9ம் தேதி, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார் என்று, கர்தினால் ஆஞ்சலோ தெ தொனத்திஸ் அவர்கள், இத்திங்களன்று அறிவித்தார்.

உரோம் மறைமாவட்ட ஆயரான திருத்தந்தையின் பிரதிநிதியாக, அம்மறைமாவட்டத்தை நடத்தும் கர்தினால் தெ தொனத்திஸ் அவர்கள், மறைமாவட்ட டுவிட்டர் செய்தியில் இவ்வாறு அறிவித்துள்ளார். 

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா

பாப்பிறை பசிலிக்கா எனவும், உலகிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம் அன்னை ஆலயமாகவும் காலங்காலமாகக் கருதப்பட்டுவரும் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவை, உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன் அவர்கள், திருத்தந்தை முதலாம் சில்வெஸ்டர் அவர்கள் தனக்கு திருமுழுக்கு அளித்த இடத்தில் கட்டி எழுப்பினார்.

கி.பி.4ம் நூற்றாண்டு முதல், 16ம் நூற்றாண்டு வரை, இப்பசிலிக்காவில் ஐந்து பொதுச்சங்கங்கள் நடைபெற்றுள்ளன. ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுகள், திருத்தந்தையர், இந்த பசிலிக்காவுக்கு அருகில் தங்கியிருந்தார்கள்.

முதலில், மீட்பராம் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த இந்த பசிலிக்கா, நூற்றாண்டுகளுக்குப்பின், கிறிஸ்துவோடு, புனித திருமுழுக்கு யோவான், நற்செய்தியாளர் புனித யோவான் ஆகிய இருவருக்கும் சேர்த்து அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு, புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரின் வெள்ளியிலான மார்பளவு திருவுருவங்களில், இவர்களின் தலைகள் புனிதமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இரவு உணவின்போது நம் ஆண்டவர் இயேசு பயன்படுத்திய மேஜையும் இந்த பசிலிக்காவில் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2019, 16:00