தேடுதல்

Vatican News
பன்னாட்டு பனி ஹாக்கி விளையாட்டு கூட்டமைப்பினர் சந்திப்பு பன்னாட்டு பனி ஹாக்கி விளையாட்டு கூட்டமைப்பினர் சந்திப்பு   (Vatican Media)

பந்தய விளையாட்டு நடவடிக்கைகள், சந்திக்கும் இடங்கள்

பன்னாட்டு பனி ஹாக்கி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திவரும் கூட்டத்தில் பங்கெடுக்கும் பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பனி ஹாக்கி விளையாட்டில் கலந்துகொள்ளும் எல்லாருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு, பன்னாட்டு பனி ஹாக்கி விளையாட்டு கூட்டமைப்பு எடுத்துவரும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பன்னாட்டு பனி ஹாக்கி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திவரும் கூட்டத்தில் பங்கெடுக்கும் ஏறத்தாழ 176 பிரதிநிதிகளை, செப்டம்பர் 27, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த விளையாட்டுக்குத் தேவைப்படும் தனிப்பட்ட திறமைகள் மற்றும், சக்தி பற்றியும் குறிப்பிட்டார்.

பனிச்சறுக்கு, பனியில் சமநிலை காப்பது, விழுந்தபின் உடனே எழுந்து விளையாடுவது  போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த பனி ஹாக்கி விளையாட்டு போன்றவற்றிற்கு, மணிக்கணக்கில் பயிற்சி தேவைப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இந்த விளையாட்டை உலக அளவில் வளர்ப்பதற்கு ஆதரவு தரும் முயற்சியில், இளையோர், வயதானவர், ஆண், பெண் என, எல்லா தரப்பினரிலும் உள்ள சிறந்த திறமைகளை ஊக்குவித்து, உறவுகளை வளர்க்கவும், இந்த கூட்டமைப்பு உழைத்து வருகின்றது என்று பாராட்டினார்.

இந்த கூட்டமைப்பு இவ்வாண்டு மே மாதம் அனுமதி பெற்றுள்ள நன்னெறி விதிமுறைகள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, விளையாட்டு வீரர்கள், விதிமுறைகளின்படி விளையாடுவதோடு, போட்டியாளர்களை மதிப்பதில் நீதியோடு நடந்துகொள்ளுமாறு    கேட்டுக்கொண்டார்.

விளையாட்டு, அமைதி, மற்றும், ஒன்றிப்பை ஊக்குவிப்பதோடு, நம் வளர்ச்சியிலும், ஒருங்கிணைந்த முன்னேற்றத்திலும் அங்கம் வகிக்கின்றது என்பதை நினைவில் இருத்த வேண்டியது முக்கியம் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

27 September 2019, 15:06