தேடுதல்

Vatican News
பிறரன்புப் பணியாற்றிவரும் இம்மானுவேல் என்ற அமைப்பினருடன் திருத்தந்தை பிறரன்புப் பணியாற்றிவரும் இம்மானுவேல் என்ற அமைப்பினருடன் திருத்தந்தை  (ANSA)

லெச்சே இம்மானுவேல் குழுமத்தினர் சந்திப்பு

இம்மானுவேல் குழுமத்தில் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும், பொதுநிலை தன்னார்வல மறைப்பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

தென் இத்தாலியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக, பிறரன்புப் பணியாற்றிவரும் இம்மானுவேல் என்ற அமைப்பின் ஏறத்தாழ நானூறு உறுப்பினர்களை, செப்டம்பர் 26, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் மகிழ்வை வாழும் வழிகளைத் தேடுகின்ற குழுமங்களைச் சந்திப்பது, எப்போதும் தனக்கு மகிழ்வளிக்கின்றது என்று கூறினார்.

தென் இத்தாலியின் லெச்செ நகரைச் சேர்ந்த இம்மானுவேல் குழுமம், நாற்பது ஆண்டுகளுக்குமுன், கிறிஸ்மஸ் பெருநாளன்று உருவாகியுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இந்தக் குழுமத்தினர், இந்தப் பெயருக்கேற்ப, கிறிஸ்துவோடும், துன்பத்தில் வாழ்கின்ற சகோதரர், சகோதரிகளோடும் உடனிருந்து வாழுமாறு வலியுறுத்தினார்.

மற்றவருக்கு உங்களைத் துணிச்சலுடன் வழங்குகையில் கிடைக்கும் மகிழ்வையும், நம்பிக்கையையும், எவரும் திருடிவிடாமல் இருப்பதில் கவனமாய் இருங்கள், ஒருவரையொருவர் புண்படுத்தாமல் ஒன்றிணைந்து வாழுங்கள், ஏமாற்றங்கள் மற்றும், தோல்விகளுக்குப்பின், மீண்டும் வலைகளை வீச அஞ்ச வேண்டாம் என்றும் திருத்தந்தை கூறினார்.

பணியில் களைப்பாக உணர்ந்தாலும், மகிழ்வோடு தொடர்ந்து பணியாற்றுங்கள், உங்கள் அழைப்பு மற்றும், இறைப்பணிக்கு விசுவாசமாக இருங்கள் என்று, இம்மானுவேல் குழுமத்திடம் கூறியத் திருத்தந்தை, இவையனைத்திற்கும், உயிருள்ள தண்ணீராகிய இயேசுவிடமிருந்து சக்தியைப் பெறுங்கள் என்றும் கூறினார்.

இறுதியில், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார். 

மறைமாவட்ட அருள்பணியாளர், இருபால் துறவியர், மற்றும், பொதுநிலை தன்னார்வல மறைப்பணியாளர்களைக் கொண்ட இம்மானுவேல் பன்னாட்டு குழுமத்தில், 11, 500 பேருக்குமேல் உறுப்பினர்களாக உள்ளனர்.

இம்மானுவேல் குழுமம், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற அவரின் பிரசன்னத்தை வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க அருங்கொடை இயக்கத்தின் Pierre Goursat, Martine Laffitte ஆகிய இருவரால், 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

26 September 2019, 15:20