தேடுதல்

Vatican News
‘டிஜிட்டல் யுகத்தில் பொது நலன்’  வத்திக்கான் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் சந்திப்பு ‘டிஜிட்டல் யுகத்தில் பொது நலன்’ வத்திக்கான் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் சந்திப்பு   (Vatican Media)

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நன்னெறி சவால்கள்

‘டிஜிட்டல் யுகத்தில் பொது நலன்’ என்ற தலைப்பில், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையும், திருப்பீட கலாச்சார அவையும் இணைந்து நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை உரையாற்றியாற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தொழில்நுட்பத் துறையில் இடம்பெறும் முன்னேற்றம், ஒருவர் ஒருவருடனும், படைப்புகள் அனைத்துடனும் கொள்ளும் உறவில், மக்களின் முழுமையான வளர்ச்சியை உயர்த்துவதாய் இருந்தால், சிறந்ததோர் உலகு அமைவது இயலக்கூடியதே என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார்.

பொதுநலன், நன்னெறி சுதந்திரம், கடமையுணர்வு, உடன்பிறந்த உணர்வு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, அறநெறியால் தூண்டப்பட்டு, தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் இடம்பெற்றால், சிறந்ததோர் உலகை அமைக்கலாம் எனவும், திருத்தந்தை கூறினார்.

‘டிஜிட்டல் யுகத்தில் பொது நலன்’ என்ற தலைப்பில், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையும், திருப்பீட கலாச்சார அவையும் இணைந்து உரோம் நகரில் நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் 180 பிரதிநிதிகளுக்கு, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில், செப்டம்பர் 27, இவ்வெள்ளியன்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.

பொது நலன், ஒவ்வொரு தனி மனிதரின் குறிப்பிட்ட நலனிலிருந்து பிரிக்க முடியாதது என்பதில் உறுதியாய் இருந்து, ஒவ்வொரு மனிதரின் மாண்பைப் பாதுகாப்பதற்குரிய பணிக்கு, இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நீங்கள், உறுதியான ஒழுக்கநெறிமுறையில் அடித்தளமிட்டுள்ளனர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.

மனித சமுதாயத்திற்குத் தீர்வுகள் தேவைப்படும் பிரச்சனைகள் குறித்து, இந்த கருத்தரங்கில் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, பணித்தளங்களில் ரோபோக்கள் செயல்படுவதன் நேர்மறை மற்றும், எதிர்மறை விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார். ரோபோக்கள், ஆயிரக்கணக்கான மக்களின் வேலைக்கு அச்சுறுத்தலாக உள்ளதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

செயற்கையான அறிவைப் பயன்படுத்துவதோடு தொடர்புடைய நன்மைகள் மற்றும், ஆபத்துகள் போன்றவற்றையும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

27 September 2019, 15:12