தேடுதல்

புலம்பெயர்ந்தோர்க்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை (கோப்புப்படம்) புலம்பெயர்ந்தோர்க்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை (கோப்புப்படம்) 

105வது உலக புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் நாள் திருப்பலி

குடிபெயர்ந்தோர், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தோர், மனித வர்த்தகத்திற்குப் பலியானோர் போன்றோரின் நல்வாழ்வு பற்றி சிந்தித்துப் பார்க்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரின் 105வது உலக நாளை முன்னிட்டு, செப்டம்பர் 29, இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியின் இறுதியில், விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் வலம்வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளாகத்தின் வலது பக்கத்தில், புலம்பெயர்ந்தோர் நினைவுச்சின்னம் ஒன்றையும் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் அமைப்பின் ஒத்துழைப்புடன், இத்தாலிய ஆயர் பேரவை, இஞ்ஞாயிறு திருப்பலியை நடத்துகின்றது.

“அவர்கள் வெறும் புலம்பெயர்ந்தோர் மட்டுமல்ல” என்ற தலைப்பில், இந்த உலக நாளுக்கென வெளியிட்டிருந்த செய்தியில், குடிபெயர்ந்தோர், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தோர், மனித வர்த்தகத்திற்குப் பலியானோர் போன்றோரின் நல்வாழ்வு பற்றி சிந்தித்துப் பார்க்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.   

காந்தி பிறந்ததன் 150ம் ஆண்டு

மேலும், மகாத்மா காந்தி அவர்கள் பிறந்ததன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, அக்டோபர் 01, வருகிற செவ்வாயன்று, கருத்தரங்கு ஒன்றை நடத்துகின்றது.  

“உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக, உடன்பிறந்த அன்பு மற்றும், அஹிம்சை” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில், இந்தியா உட்பட பல நாடுகளிலுள்ள பல்வேறு மதப் பிரநிதிகள் உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவர்கள், 1869ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம்  தேதி போர்பந்தர் எனும் நகரில் பிறந்தார். அக்டோபர் 2, அனைத்துலக வன்முறையற்ற நாளாகக் (உலக அஹிம்சை தினம்) கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2019, 14:59