தேடுதல்

Vatican News
புதன் பொது மறைக்கல்வியுரை 180919 புதன் பொது மறைக்கல்வியுரை 180919  (Vatican Media)

திருத்தந்தை - மறதி நோயாளிகளுக்காகச் செபிப்போம்

மறதி நோய் விழிப்புணர்வு உலக நாள், 2012ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகில், மூன்று பேருக்கு இருவர், மறதி மற்றும், அது தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

Alzheimer எனப்படும் மறதி நோய் மற்றும், புற்றுநோயால் துன்புறுவோர்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளும், அந்நோய்களைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் ஆய்வுகளும், மேலும் அதிகரிக்கும்படியாக, செப்டம்பர் 18, இப்புதனன்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், இப்புதன் காலை 9.30 மணியளவில் நடைபெற்ற பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் இவ்வாறு விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நோயாளிகளுக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்தார்.

மறதி நோயால் துன்புறுவோருடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் உலக நாள் செப்டம்பர் 21, வருகிற சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படுவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நோயாளர்கள் வன்முறை, மற்றும், உரிமை மீறல்களால் அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர், அவர்களின் மாண்பு நசுக்கப்படுகின்றது என்று கூறினார்.

இந்நோயாளர்களைத் துன்புறுத்தும் இதயங்கள் மனமாறவும், இந்நோயாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும், அவர்களை அன்புடன் பராமரிக்கும் அனைவருக்காகவும் செபிப்போம் என்று, பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மறதி நோய் விழிப்புணர்வு உலக நாள், 2012ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகில், மூன்று பேருக்கு இருவர், மறதி மற்றும், அது தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டில், 65 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 2 இலட்சம் பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

18 September 2019, 15:28