தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் இத்தாலிய கத்தோலிக்க ஊடகவியலாளர் கழகம் திருத்தந்தையுடன் இத்தாலிய கத்தோலிக்க ஊடகவியலாளர் கழகம்  (Vatican Media)

திருத்தந்தை - குரலற்றவர்களின் குரல்களாகச் செயல்படுங்கள்

அமைதி, நீதி மற்றும், ஒருமைப்பாட்டின் சொற்களைப் பயன்படுத்துவதன் வழியாக, நீதி நிறைந்த சமுதாயங்களை அமைக்க முடியும் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி

இத்தாலிய கத்தோலிக்க ஊடகவியலாளர் கழகம் துவங்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, அக்கழகத்தின் 170 பிரதிநிதிகளை, செப்டம்பர் 23, இத்திங்களன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் சொற்கள் வழியாக, தீமையிலிருந்து நன்மையைப் பகுத்தறிவதற்கு உதவ முடியும் என்று கூறினார்.

“மக்களுக்கும், நற்செய்திக்கும், திருஅவையின் அதிகாரப்பூர்வ வெளியீடுக்கும் பணியாற்றுவதால் தூண்டப்பட்ட திருஅவை கழகம்” என்ற குறிக்கோளுடன் துவங்கப்பட்டுள்ள இக்கழகம், அதனை உருவாக்கியவரின் கனவின்படி வாழுமாறு கேட்டுக்கொண்டார்.

தீமையிலிருந்து நன்மை

முக்கியமான அல்லது வரலாற்று நிகழ்வுகளை எழுதுகின்ற ஊடகவியலாளர், தீமையிலிருந்து நன்மையையும், மனிதமற்ற நிலையிலிருந்து மனிதத்தையும் பிரித்துப் பார்க்கும், ஊடகவியலின் மனச்சான்றின் குரலாக இருக்குமாறு பரிந்துரைத்த திருத்தந்தை, எந்த நிலையிலும் உண்மை பேசுமாறும், எப்போதும் மதிப்புடனும், ஆணவமின்றியும் நடந்துகொள்ளுமாறும் கூறினார்.

வறண்ட இதயங்கள் மத்தியில், உண்மையான வார்த்தைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும், ஊடகவியளாலரின் வார்த்தைகள், உலகை வடிவமைக்கும் என்றும், இவர்கள் கூறும் கதைகள், சுதந்திரம் அல்லது அடிமைமுறையை ஊக்குவிப்பதாய் அமையும் என்றும், திருத்தந்தை தெரிவித்தார்.

அமைதி, நீதி மற்றும், ஒருமைப்பாட்டின் சொற்களைப் பயன்படுத்துவதன் வழியாக, நீதி நிறைந்த மற்றும், ஊக்கமூட்டும் சமுதாயங்களை அமைக்க முடியும் என்ற திருத்தந்தை, டிஜிட்டல் உலகில் ஊடகவியலாளரின் கடினமான பணி பற்றியும் குறிப்பிட்டு, நம்பகத்தன்மை கொண்ட செய்திகளை வழங்க அஞ்ச வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.  

23 September 2019, 15:36